News

இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய

ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் கோட்டாபய ராஜபக்ஷ, தனது உண்மை உருவத்தை மறைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கீழ்த்தரமான இனவாதத்தைக் கையில் எடுக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்து வரும் இனவாதக் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்குச் சொல்லும் செய்தி. தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறவோ, அஞ்சலி செலுத்தவோ உரிமையில்லை என்பதாகும்.

உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நாட்டைப் பிளவு படுத்திவிடுமெனவும், மீண்டும் போரை ஆரம்பித்து விடுமெனவும் சிங்கள மக்களை அச்சமூட்டி அரசியல் செய்யுமளவுக்கு கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டு வருகிறனர்.

அந்த இன அழிப்புப் போரின் வீர நாயகனாக வலம் வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச இந்த நினைவேந்தல் நிகழ்வு நாட்டையே அழிவை நோக்கிக் கொண்டு போகுமளவுக்கு அபாயகரமானதெனச் சித்திரித்துள்ளார்.

பல்வேறு ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் இவர், தனது உண்மை உருவத்தை மறைக்க கீழ்த்தரமான இனவாதத்தைக் கையிலெடுப்பதும், படையினரைக் காக்கும் ஆபத்தாந்தவனாகக் காட்டிக் கொள்வதும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.

விடுதலைப் புலிகள் விடுவிக்கப்படுகின்றனர் எனவும், உயிர் நீத்த புலிகளை நினைவு கூரவும், தூபி அமைக்கவும் அனுமதி வழங்கப்படுகின்றது எனவும், படையினர் கைது செய்யப்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

மேலும், போரில் கொல்லப்பட்ட பொது மக்கள் கூட அவர்களுக்குப் புலியாகத் தெரிகிறது. புலிகளோ அல்லது பொது மக்களோ அவர்கள் எங்கள் உறவுகள், எங்கள் இரத்தங்கள்.

அவர்களை நினைவுகூர எங்களுக்கு உரிமையில்லையா? அழுவதற்குக்கூட உரிமையற்ற அடிமைகளா நாங்கள்?

புலிகளெல்லாம் விடுவிக்கப்படுகின்றனரென்றால் அரசியல் கைதிகளாக விசாரணையின்றி, விடுதலையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் யார்?

படையினரால் கைது செய்யப்பட்டும், படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டும், காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் எங்கே?

வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், திருமலை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் எங்கே? எப்போது விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் அதிகாரத்தில் இருந்தபோது நடைபெற்ற இத்தகைய மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கு அவரால் விளக்கமளிக்க முடியுமா? என சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top