India

இழுபறிக்கு மத்தியில் கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா.

கர்நாடக சட்டசபைக்கான முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பதுடன், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 104 ஆசனங்களையும் காங்கிரஸ் 78 ஆசனங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 ஆசனங்களையும் பெற்றன. காங்கிரஸூடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி அறிவித்தார். எனினும், பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற பா.ஜ.க ஆட்சியமைக்கப் போவதாக எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்து அறிவித்திருந்தார். இதன் பின்னர் சென்ற காங்கிரஸ் கூட்டணி தமக்கே பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதால் தாம் ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முதல்வராக பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு அழைப்புவிடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்றுமுன்தினம் இரவே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 5 மணி வரை 3 மணி நேரம் வழக்கு விசாரிக்கப்பட்டது. எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்திவைக்க முடியாது என வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழாம் அறிவித்தது. அதேசமயம், எடியூரப்பா ஆளுநரிடம் அளித்துள்ள எம்எல்ஏக்கள் கடிதத்தின் நகலை அளிக்கவும் பாஜக வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணிக்கு எடியூரப்பாவின் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

“கர்நாடக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி என்பது, பாவக்கூட்டணி. அதிகார வெறியுடன் அலைந்த அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர்” என எடியூரப்பா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஆளுநரின் ஒரு பக்கச்சார்பான செயற்பாடு இந்திய ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இரு தரப்பினரும் பெரும்பான்மையை நிரூபிக்க கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க தமது பக்கம் சட்டசபை உறுப்பினர்களை இழுப்பதற்கான வலைவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதிலிருந்து தமது உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி, சட்டசபைக்குத் தெரிவான உறுப்பினர்கள் அனைவரையும் கேரளாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள விடுதியொன்றில் தங்கவைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளது.

மறுபக்கத்தில் தமது கட்சி உறுப்பினர்களை இழுப்பதற்காக மோடி அரசாங்கம் அமலாக்கப்பிரிவை ஏவுவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டசபை உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதற்கான திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மாநிலத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top