News

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம்: அமெரிக்கா விலகல்.

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஒப்பந்தத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளன

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் ஏற்றுக்கொண்டது.

முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தம், 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி அமலுக்கு வந்தது.

இதன் 2 முக்கிய அம்சங்கள், ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கை விட வேண்டும். குறிப்பாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் 15 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்; இதற்கான எந்திரத்தை நிறுவுவதை 10 ஆண்டுகளில் குறைக்க வேண்டும்;

இதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதாகும்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பதவிக்கு வந்த டொனால்டு டிரம்ப், இந்த ஒப்பந்தத்தை கடுமையாக சாடினார்.

சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, “ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை உண்மையுடன்
செயல்படுத்தவில்லை, அந்த நாடு ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்து உள்ளது” என்ற குற்றச்சாட்டை கூறியதுடன், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில் முடிவு எடுக்கப்படும் என்றுகூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்படி நேற்று முன்தினம், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் டி.வி.யில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “இந்த ஒப்பந்தம், மிக மோசமான ஒப்பந்தங்களில் ஒன்று, அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களில் எல்லாம் ஒரு தரப்பானது, இந்த ஒப்பந்தம்” என்று
குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, “ஈரான் அளித்த வாக்குறுதி பொய்யானது என்பதற்கு இப்போது நம்மிடம் ஆதாரம் உள்ளது.

இது அமைதியை கொண்டுவரவில்லை. இது சமாதானத்தை கொண்டுவரவில்லை. இது ஒரு போதும் அதைச் செய்யாது” என குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது ரத்து செய்யப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் போடப்படும்” என்றும் கூறினார்.

ஈரான் மீதான பொருளாதார தடைகள் முழு விளைவுடன் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் உறுதி செய்து உள்ளார்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை தொடரப்போவதாக அறிவித்து உள்ளன.இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கத்தை தடை செய்யக்கூடாது என அமெரிக்காவை வலியுறுத்தின.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ள எஞ்சிய நாடுகளுடன் இணைந்து செயல்படப்போவதாக அவை அறிவித்து உள்ளன. ரஷியாவும், சீனாவும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

அமெரிக்காவின் விலகலுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து உள்ளார். பிற நாடுகள் ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். அமெரிக்காவின் விலகலைத் தொடர்ந்து, அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை காப்பாற்ற முடியாவிட்டால், யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “வரும் வாரங்களில் ஐரோப்பிய நாடுகளுடனும், சீனாவுடனும், ரஷியாவுடனும் பேசுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ள பிற நாடுகள் ஒத்துழைத்தால், ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று குறிப்பிட்டு

உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top