உணர்வெழுச்சியுடன் நியூசிலாந்தில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழின அழிப்பு நாள் .

தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகப்பகுதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கிலும் நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டது. இந்நிலையில், நியூசிலாந்து ஆக்லாந்து மாநிலத்தில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மிக உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு செயற்குழு குறித்த நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
ஆக்லாந்து மாநிலத்தில் வாழ்கின்ற தமிழர்கள், மற்றும் தமிழர் அமைப்புக்கள் இணைந்து தமிழின அழிப்புநாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இதன்போது தமிழர் பேரவையைச் சேர்ந்த தயா என்பவரால் தமிழீழ தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன், நியூசிலாந்து தேசியகொடியினை மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த துரைராசாவும், பொதுச்சுடரை நியூசிலாந்து கலை இலக்கியவட்டப் பொறுப்பாளர் அற்புதசிங்கம் ஏற்றி வைத்துள்ளார். ஈகைச்சுடரை நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு நிர்வாகி கௌரீசன் ஏற்றி வைத்ததுடன், நியூசிலாந்தில் வாழும் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.