News

உலகளாவிய நீதி மனித குலத்தின் தோல்வி!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அமைதி மாளிகையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி போரும் நீதியும் என்ற தொனிப்பொருளில் ஒரு கருத்தரங்கு நடந்தது. சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழு இந்தக் கருத்தரங்கிற்கு ஒழுங்குகளைச் செய்திருந்தது. நான்கு முக்கியமான விடயங்களை ஆராயக்கூடிய வகையில் இந்தக் கருத்தரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

முதலாவது தீவிரவாதம் ஆயுத மோதல்களின் போது அனுமதிக்கப்பட்ட படைப்பலத்தின் அளவு. தீவிரவாதத்துக்கு எதிராக எவ்வாறு போரிடுவது, ஆளில்லா விமானங்கள் மற்றும் அரசு அல்லாத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை கையாள்வது எப்படி, இதற்காக அனுமதிக்கப்பட்ட பலத்தின் அளவு என்ன என்பன குறித்து மேற்படி தொனிப்பொருளில் ஆராயப்பட்டது.

இரண்டாவது ஆக்கிரமிப்பு தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தல் இதற்கான மூலோபாய வழிகள் மற்றும் நிலையான கருத்துகள். மூன்றாவது போரின் முதலாவது பலி உண்மையா? என்பது பற்றிய ஒரு குழுநிலை விவாதம் நடத்தப்பட்டது. அண்மையில் சிரியாவில் நடத்தப்பட்ட ஷரின் வாயுத் தாக்குதல்கள், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புகள் மற்றும் அது பற்றிய உண்மைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன.

நான்காவது உள்நாட்டில் சர்வதேச குற்றவியல் சட்டத்துக்கு எதிர்காலம் உள்ளதா? என்பது. இது மிகவும் முக்கியமானது. இலங்கை விவகாரத்துடனும் தொடர்புடையது. இந்தக் குழுநிலை விவாதத்தில் சர்வதேச மட்டத்தில் சர்வதேச குற்றவியல் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் தடைகள், சர்வதேச நீதியின் எதிர்காலம் சர்வதேச கலப்பு அல்லது உள்நாட்டு நீதித்துறையில் தங்கியுள்ளதா என்பன குறித்து விவாதிக்கப்பட்டன.

இலங்கையில் போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதும் கலப்பு விசாரணையே நடத்தப்படும் என்று ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலை மையப்படுத்தியே மேற்படி விவாதம் நடத்தப்பட்டது.

ஹேக்கில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் முக்கியமான ஒருவர் நவநீதம்பிள்ளை. முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளரான இவர் தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். தென்னாபிரிக்க உயர்நநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். சர்வதேச அளவில் போர்க்குற்றங்களுக்கான நீதி தொடர்பான பல்்வேறு செயற்பாடுகளில் பங்கேற்ற நவநீதம்பிள்ளை அண்மைக்காலமாக வடகொரியா தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறார்.

ஹேக் மாநாட்டில் பங்கேற்ற நவநீதம்பிள்ளையை சர்வதேச நீதி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் Justice Hub என்ற ஊடகத்துக்காக ஜனெட் அன்டர்சன் செவ்வி கண்டிருந்தார். அந்தச் செவ்வியில் வட கொரியாவையும் அதன் போர்க்குற்றங்கள் பற்றியுமே அதிகம் பேசப்பட்டிருந்தது. அந்தச் செவ்வியின் கடைசிக் கேள்வியில் மாத்திரம் இலங்கை விவகாரத்தை உதாரணமாக குறிப்பிட்டிருந்தார் நவநீதம்பிள்ளை.

இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற வகையில் அமைந்திருந்தது அந்தக் கருத்து. அது மாத்திரமன்றி சர்வதேச நீதி விடயத்தில் நாடுகளின் இரட்டை வேடத்தையும் தனிப்பட்ட நலன்களையும் சாடுவதாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார். மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்ட முற்படும் போது எதிர்கொள்ளப்படும் சவால்களை நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து வெளிப்படுத்தியிருக்கிறது.

ஐநா மனித உரிமைகள் பேரவையை உருவாக்கிய போதிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் சர்வதேச சமூகம் தோல்வியையே சந்தித்து வருகிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்ற மீறல்களுக்கு எதிராக இன்னமும் கூட ஒரு நம்பகமான நியாயமான விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியவில்லை. போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் இதனைச் சாதிக்க முடியாதமை சர்வதேசத்தின் முக்கியமான தோல்வி.

சிரிய அரசாங்கம் விஷ வாயுத் தாக்குதல்களை நடத்திய போது ஐநா பாதுகாப்புச் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அங்கு ரஷ்யா தடையாக இருந்தது. அதாவது மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் கூட்டுப் பொறுப்பு வெளிப்படுத்தப்படாமை முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்பது நவநீதம்பிள்ளையின் கருத்து.

நாடுகள் தமக்கிடையில் அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கின்றன. சொந்த நலன்களையும் பிராந்திய நலன்களையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் அமைப்புகளை வைத்துக் கொண்டு தமது தவறுகளை மறைக்க முனைகின்றன. நாடுகளின் சொந்த நலன்களும் பிராந்திய நலன்களுமே இப்போது சர்வதேச நீதியை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வலியுறுத்தப்பட்ட போதும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கலப்பு விசாரணைப் பொறிமுறை முன்மொழியப்பட்டது. ஆனாலும் அரசாங்கமோ உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்று கூறுகிறது. இதற்கு எதிராக எந்த நாடுமே அழுத்தங்களைக் கொடுக்கவில்லை. ஜெனிவாவில் கலப்பு விசாரணையை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் உள்நாட்டு விசாரணை தான் நடத்தப்படும் என்று அழுங்குப் பிடியில் நிற்கும் போது சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்கிறது.

இத்தகைய கட்டத்தில் தான் இது உள்நாட்டு விவகாரம் என்று கூறி தென்னாபிரிக்காவுமத் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. தமக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியிருக்கிறார் நவநீதம்பிள்ளை. தென்னாபிரிக்காவில் நிலவிய நிறவெறியை உள்நாட்டு விவகாரமாக சர்வதேச நாடுகள் பார்த்திருந்தால் இன்னமும் தமது நாடு நிறவெறி ஆட்சிக்குள் தான் இருந்திருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த மீறல்களை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குக் கொண்டு செல்ல முயன்ற போதே கடுமையான சவால்கள் எதிர்கொள்ளப்பட்டிருந்தன. சீனா ரஷ்யா பாகிஸ்தான் ஈரான் கியூபா என்று பல நாடுகள் அதனை தீவிரமாக எதிர்த்தன. இந்தியாவும் கூட இது ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்படுவதை விரும்பவில்லை. போரின் போது நடந்த மீறல்களையோ அதன் பாரதூரத் தன்மையையோ இந்த நாடுகள் கவனத்தில் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணவுமில்லை.

அந்த நாடுகளுக்குத் தேவைப்பட்டதெல்லாம் தமது நட்பு நாடான இலங்கையைக் காப்பாற்றுவது மட்டும் தான். அதற்காக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த மேற்குலக நாடுகள் மட்டும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவ்வாறு செயற்பட்டன என்று கூற முடியாது. இலங்கையில் அதிகரித்து வந்த சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான ஓர் உலகளாவிய நடவடிக்கை தேவைப்பட்டது. அதற்காக போர்க்குற்றங்களுக்கான நீதியை மேற்குலக நாடுகள் பயன்படுத்திக் கொண்டன. அவ்வளவு தான்.

அதனால் தான் 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், மேற்குலகம் இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டது. இதனால் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நம்பகமான நீதிப் பொறிமுறையைக் கூட அவர்களால் உருவாக்க முடியாமல் இருக்கிறது. உலகளாவிய ரீதியில் நீதியை நிலைநாட்டுதல் என்பது இப்போது மிகப் பெரிய சவாலுக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.

தனிப்பட்ட மற்றும் பிராந்திய நலன்களைக் கடந்த விதிவிலக்கான சில சூழ்நிலைகளில் மாத்திரமே சர்வதேச நீதியை உறுதிப்படுத்த முடிகிறதே தவிர மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் அது தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. நவநீதம்பிள்ளையின் கருத்து மாத்திரமன்றி ஹேக்கில் நடந்த கருத்தரங்கும் அதனையே தான் பதிவு செய்திருக்கிறது. இத்தகைய நிலையில் உலகளாவிய நீதியை நிலைநாட்டும் உத்திகளின் தோல்வி நவீன உலக ஒழுங்கில் மனித இனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top