News

எமது மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும்: சிவாஜிலிங்கம் .

இலங்கை அரசாங்கம் எங்களுக்கு அரசியல் தீர்வினை தரவில்லையென்றால் ஐநா மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் வடகிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு எமது மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த 70வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதிவேண்டும் என்ற தலைப்பில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. இதன்கீழ் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம் உட்பட பிரதேசபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், மே 12 தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக நாம் அனுஸ்டித்துவருகின்றோம். 2009ஆம் ஆண்டு தமிழீழ தேசிய போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட அந்த போர் முடிவுக்குவந்த மே18 வடக்கு மாகாணசபை தமிழின அழிப்பு நாள் என்றும் தமிழ் தேசிய துக்கநாள் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த மையப்புள்ளியாக கருதப்படுகின்றதே தவிர இலங்கை முழுவதும் கடந்த 70வருடங்களாக அரச படைகளினாலும் அதன் ஆதரவுடனும் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நினைவுகூரும் வகையிலேயே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது. 2006ஆம் ஆண்டு இறுதி யுத்ததினை கிழக்கின் சம்பூரிலே ஆரம்பித்து படுகொலைகளும் வாகரை தொடக்கம் கிழக்கு மாகாணம் பூராகவும் இடம்பெற்று வடக்கில் மன்னாரில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவொன்று 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக கூறியது. இன்னுமொரு குழு 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக கூறியது. எதுஎப்படி இருந்தாலும் தமிழினப்படுகொலை நடைபெற்றுள்ளது. அத்தனை மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் நாங்கள் போராடிவருகின்றோம்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையினை பாராட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பல நாடுகளின் தலைவர்களை சந்தித்ததன் விளைவாகவும் எமது புலம்பெயர் உறவுகளும் போராடியதன் காரணமாகவும் இங்குள்ள தமிழ் தேசிய தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும் சர்வதேச நீதிபொறிமுறையொன்றை ஆரம்பிப்பதற்கான கட்டத்தில் வந்து நிற்கின்றது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா இந்த தீர்மானத்தினை கொண்டுவரமுயற்சித்தபோது வடமாகாண முதலமைச்சரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தனர். ஆணைக்குழு விசாரணையொன்றை அதன்போது கோரியிருந்தோம். ஆணைக்குழு அமைக்கப்படாவிட்டாலும் விசாரணையொன்றை செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதுதான் இலங்கைக்கான விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டு 2015 மார்ச்சில் அதனை சமர்ப்பிக்கவிருந்தவேளையில் இலங்கை ஆறுமாத கால அவகாசம்கேட்டு செப்டம்பர் அது சமர்க்கப்பட்டதன் பின்னரே அமெரிக்கா சர்வதேச விசாரணை பொறிமுறை தேவையென்ற தீர்மானத்தினை கொண்டுவந்தபோது இலங்கை கெஞ்சிகூத்தாடி வெளிநாட்டு நீதிபதிகளைக்கொண்ட கலப்பு நீதிமன்றம் என்று திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் கால இழுத்தடிப்பு செய்யப்பட்டே வருகின்றது.

இலங்கை மீது தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையிழந்து காணப்படுவதன் காரணமாக சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை ஒன்றை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் ஒரிரு ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. தமிழ் மக்கள் கட்சி பேதங்களை மறந்து இதனை உறுதியாக கேட்கவேண்டும்.தமிழின படுகொலைகள்தான் எமது போராட்டத்திற்கு உரமூட்டி நின்றன 948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் 10இலட்சம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் குடியுரிமையினை பறிக்கப்பட்டது.ஐநா சட்டத்தின் படி பௌதீக வளங்களை அழித்தாலும் குறைத்தாலும் இனப்படுகொலையென்றே சொல்லப்படுகின்றது. பல படுகொலைகள் இந்த நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் மீதான படுகொலைதான் இன்று எங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுவிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் நீதி வேண்டும். படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துவதுடன் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுவதற்கான தீர்வொன்றை பெறுவதுதான் அவர்களுக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். சர்வதேச ரீதியாக எங்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.அது சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறையூடாக எங்களது பிரச்சினைகளை வெளியில் கொண்டு செல்வதற்காகத்தான் இவ்வாறான நிகழ்வுகளை செய்கின்றோம்.

எங்களுக்காக எங்களது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.70ஆண்டுகள் இந்த நாட்டில் நடாத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக 700 பக்க அறிக்கையினை ஐ.நா.வில் ஒப்படைத்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை பிள்ளையார் ஆலயம் உட்பட பல கிராமங்களில் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இன்று நாங்கள் நினைவுகூர்ந்துள்ளோம். எங்களை நாங்களே ஆளக்கூடிய தீர்வொன்றினை வென்றெடுப்பதற்கும் சர்வதேச ரீதியாக எங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறை ஒன்றை கோருவோம்.

இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடையாது. சர்வதேச ரீதியாக எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இலங்கை அரசாங்கம் எங்களுக்கு அரசியல் தீர்வினை தரவில்லையென்றால் ஐநா மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் வடகிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு எமது மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும். இன்று கிழக்கு மாகாணம் நிமிடத்திற்கு நிமிடம் பறிபோயிக்கொண்டிருக்கின்றது. இதனை தடுத்து நிறுவத்துவதற்கு நாங்கள் அனைவரும் கட்சிபேதங்களை கடந்து ஒன்றுபட்டு நிற்பதன் மூலமே எமது இனத்திற்கு நீதி கிடைக்கும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top