கனடாவில் குடியுரிமை பெற்றுத்தருவதாக மோசடி செய்த பெண்ணுக்கு சிறை!!
கனடாவில் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பல ஆயிரம் டொலர்கள் வசூலித்த 60 வயதுப் பெண்ணுக்கு நேற்றைய தினம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த Angelina Codina, மூன்று ஆண்டுகளாக போலியான ஒரு புலம்பெயர்தல் திட்டத்தின் மூலம் கனடாவில் குடியுரிமை பெற்றுத் தருவதாக பலரை ஏமாற்றி பல ஆயிரம் டொலர்கள் வசூலித்துள்ளார்.
அவர் ஃபெடரல் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி முன்பு அவரால் ஏமாற்றப்பட்ட நான்கு பேருக்கு ஆளுக்கு 30,000 டொலர்கள் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புலம்பெயர்தல் தொடர்பாக மக்களை போலியாக ஏமாற்றுபவர்களுக்கு பொதுவாக அதிகபட்சம் இரண்டாண்டுகள் தண்டனையும் புலம்பெயர்தல் விண்ணப்பப்படிவத்தில் பொய்யான தகவல் அளிப்பதற்கு அதிகபட்சம் மூன்றாண்டுகள் தண்டனையும் வழங்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குற்றத்திற்குமான தண்டனைகளை தொடர்ந்து அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை எதிர்த்து Angelina மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.