Canada

கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு..

தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. இது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கனடிய தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து, உலகமெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் பல்நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமையாகும்.

கனடாவில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்கள் ஒட்டாவாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம், 5ஆம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் கனடாவின் தலைநகரான ஓட்டாவாவிலுள்ள கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் தாயகம், இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, மீள்கட்டுமானம் போன்ற தலைப்புகளில் உலகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு மன்றங்களில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்தவர்கள், ஈழத்தமிழ் மக்களிளின் உரிமைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக செயல்பட்டவர்கள் என 30க்கு மேற்பட்ட புலமை மிகுந்த அறிஞர்கள் பங்கு கொள்ளும் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மே 7ஆம் திகதி கனடிய நாடாளுமன்றத்தில் இம் மாநாட்டின் தீர்மானங்களும் பிரகடனங்களும் கையளிக்கப்படவிருக்கின்றன. தமிழர்களுக்கு சுய நிர்ணய அடிப்படையிலும் வரலாற்றுரீதியாகவும் தாயகம் ஒன்று உண்டு! ஈழத்தாயகத்தில் உலக நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு ஒரு தமிழினப்படுகொலையை நடாத்தியது. சர்வதேச விசாரணை வழியாகவே தமிழருக்கு நீதி கிடைக்கும் என்ற குறிக்கோள்களைக் கொண்டு குறித்த மாநாடு நடத்தப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில், உலகெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் பல் நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமையாகும். எமது உறவுகள் ஆயிரம் ஆயிரமாக 2009 இல் அழிக்கப்பட்டபோது, கனடிய பாராளுமன்றம் முன் நின்று 30 000 மேற்பட்ட தமிழர்கள் போராடினார்கள். ரொரன்ரோவில் 80,000க்கும் அதிகமான மக்கள் சங்கிலிப் போராட்டம் நடாத்தினார்கள்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மிகமுக்கியமான பெரும் வீதியை முற்றுகையிட்டு தாங்க முடியாத துயரத்தை வெளிப்படுத்திளார்கள்.

அன்று நாமும் எம்மில் நம்பிக்கை வைத்திருந்த தாயக உறவுகளும் தோற்றுப்போனோம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், சிறி லங்கா அரசின் உறுதிமொழிகளும், எவற்றையும் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றும் போக்கும், நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு, தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களை இரகசிய முகாம்களில் வைத்து சித்திர வதை செய்தும், ஆண்டுக்கணக்காக சிறைகளில் அடைத்து வைத்தும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் பாரம்பரியமான காணிகளை இராணுவம், கடற்படையினர் அபகரித்து வைத்துக்கொண்டும் இனப்பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது சிறிலங்கா அரசு.

இம் மாநாட்டின் இரு நாட்களும் ஐந்து அரங்குகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, சிறிலங்காவின் தமிழ் இன அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமாணம், மற்றும் எதிர்கால செயல்பாடுகள் எனும் தலைப்புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணப்படுத்தல் போன்றவை இடம்பெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு பின்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலக்கம்: (647) 243 9396

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top