India

கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைக்க கவர்னர் திடீர் அழைப்பு :

பெங்களூரு: கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை வென்ற பா.ஜனதாவை புதிய ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று புதிய முதல்வராக எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு பதவி ஏற்கிறார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ-104, காங்கிரஸ்-78, மஜத 38, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் தனிப்பெரும் கட்சியாக வென்ற பாஜ 104 இடங்களை மட்டுமே பிடித்ததால் ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக இருக்கும் பாஜவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதற்காக ஒருவாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் மாநில பாஜ தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ நிர்வாகிகள் நேற்று முன்தினம் கடிதம் கொடுத்தனர்.

அதே சமயத்தில் அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் திடீரென கூட்டணி அமைத்தன. இதைத்தொடர்ந்து எச்.டி.குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முடிவு செய்து நேற்று முன்தினம் ஆளுநர் வஜூபாய் வாலாவை கூட்டாக சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் கொடுத்தனர். தங்களுக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜவை ஆட்சி அமைக்க அழைப்பதா? அல்லது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணியை அழைப்பதா? என்ற குழப்பத்தில் ஆளுநர் வஜூபாய் வாலா, நேற்று முன்தினம் இரவு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று மத்திய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் சோலி சொராப்ஜியுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ், மஜத கட்சிகளின் எம்எல்ஏ.க்களின் கூட்டம் நேற்று காலை தனித்தனியாக நடைபெற்றது. பரமேஸ்வர் தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும், எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத எம்எல்ஏக்கள் கூட்டமும் நடந்தது. காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் 78 எம்.எல்.ஏக்களில் 12 பேர் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் 4 எம்.எல்.ஏக்கள் மட்டும் வந்துவிட்டனர். மஜத கூட்டத்தில் இரண்டு எம்.எல்.ஏக்கள் தாமதமாக கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து சாங்கிரலா ஓட்டலில் தங்கியிருந்த எச்,டி.குமாரசாமியை மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், தினேஷ்குண்டுராவ், எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் சென்று சந்தித்து பேசியதுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் முல்பாகல் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நாகேஷ் ஆகியோர் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள கடிதங்களை குமாரசாமியிடம் வழங்கினர்.

அதை தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு பரமேஸ்வர் மற்றும் குமாரசாமி தலைமையில் இருகட்சி எம்எல்ஏக்கள் 117 பேர், ஆளுநர் முன்பு அணிவகுப்பு நடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இதற்கு கவர்னர் மாளிகையில் அனுமதி மறுக்கப்பட்டது. இரு கட்சியிலும் தலா 10 எம்எல்ஏக்களை மட்டுமே ஆளுநர் மாளிகை காவலர்கள் அனுமதித்தனர். இதனால் அனுமதி மறுக்கப்பட்ட இரு கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமில்லாமல், கட்சி தொண்டர்களும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அமளிக்கு இடையில் இரண்டு கட்சி தலைவர்களும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில் கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் பிற மாநில ஆளுநர்கள் எடுத்த நடவடிக்கைகள், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உள்பட பல விவரங்களை ஆளுனரிடம் கொடுத்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை இன்று பதவியேற்க வருமாறு நேற்று அழைப்பு விடுத்ததாகவும், இன்று பகல் 12.40 மணிக்கு பதவியேற்பு விழா நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜாஜி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜ எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்குமார், தனது பேஸ்புக் பதிவில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டார். இருந்தாலும், பாஜவை ஆட்சி அமைக்க கவர்னர் தயாராகி விட்டதாகவும், அப்படி நடந்தால் பெரும் துரோகம், நாங்கள் சும்மா விட மாட்டோம்; கோர்ட்டுக்கு போவோம் என்று காங் – மஜத தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூரு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து போலீசாரும் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க வரும்படி ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். அவர் எடியூரப்பாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,’ பா.ஜனதா சட்டமன்ற கட்சி தலைவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை மே 16ம் தேதி என்னை சந்தித்து அளித்தீர்கள். மேலும் மே 15ம் தேதி புதிய ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமை கோரும் கடிதமும் உங்கள் சார்பில் என்னிடம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு கர்நாடகாவில் புதிய அரசை அமைக்க வரும்படி உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

பதவி ஏற்பதற்கான நேரம் மற்றும் இடத்தை நீங்கள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் சட்டப்பேரவையில் உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குள் இதுதொடர்பான நடைமுறையை முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னரின் அழைப்பை தொடர்ந்து எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பதவியேற்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

பாஜவை ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்றிரவு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி அவசர வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘நாளை (இன்று) நீதிமன்றம் துவங்கும் முன்பே கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பிறகு வழக்கு தொடர்வதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த மனுவை இன்றிரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று சிங்வி கூறியுள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடனடியாக விசாரிக்க கோரப்பட்டுள்ளது.

24 தொகுதிகளில் பாஜ டெபாசிட் காலி

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 24 தொகுதிகளில் பாஜ டெபாசிட் இழந்துள்ளது. மாகடி தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ஹனுமந்தராஜ் 4,410 வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தார். இங்கு மஜத சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 1,19,492 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் மேல்கோட்டை, ராம்நகர், சரவணபெலகோலா, நாகமங்கலா, ஹொளேநரசிபுரா, ப்ரியாபட்டணா, கிருஷ்ணராஜ நகர், முல்பாகல், சீனிவாசபுரா, சிந்தாமணி, சிந்தலகட்டா, பாகேபள்ளி, மதுகேரி, சிக்கபள்ளாபூர், கனகபுரா, மதுவள்ளி, ரங்கப்பட்டனா, புலிகேசிநகர், தேவனஹள்ளி, கோலார், கொரட்டிகெரே, கிருஷ்ணராஜபேட்டை, கனகபுரா தொகுதிகளிலும் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top