India

கர்நாடக தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை : ஆட்சி அமைப்பதில் இழுபறி.

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பிலும், பாஜ சார்பிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிக்கு மே 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி தொகுதியில் தேர்தல் ரத்தானது. இதை தொடர்ந்து 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ், பாஜ கட்சி மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

இறுதியில் பாஜ 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கர்நாடக தெற்கு மாவட்டங்களில் பாஜ கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. லிங்காயத்து தனி மதமாக அங்கீகரிக்கப்படும் என்று சித்தராமையா முதல்வராக இருந்தபோது அறிவித்தார். இது லிங்காயத்து சமூகத்தினரின் வாக்கு வங்கியை உடைக்கும் முயற்சி என பாஜ குற்றம்சாட்டியது. எனினும், லிங்காயத்து சமூகத்தினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, ஹூப்பள்ளி மாவட்டம் பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவினார். பாதாமியில் வெற்றி பெற்றார். ஷிகாரிபுரா தொகுதியில் பாஜ தலைவர் எடியூரப்பா வெற்றி பெற்றார். பெங்களூருவில் தமிழர் வாழும் பகுதிகளான சிவாஜிநகர், காந்திநகர், புலிகேசி நகர் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். ராமநகரம், சென்னபட்ணா ஆகிய இரு தொகுதிகளிலும் மஜத மாநில தலைவர் குமாரசாமி வெற்றி பெற்றார். கர்நாடகாவில் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சியாலும் மெஜாரிட்டி இடங்களை பெற முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜ தொண்டர்கள் இனிப்பு

வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இருந்தாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற கவலை அவர்களிடம் காணமுடிந்தது.
எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மஜத ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்தது. இதுதொடர்பாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சோனியாகாந்தி பேசினார். அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் உள்பட கட்சி முன்னணி தலைவர்களும் கவுடாவுடன் பேசினர்.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நேரடியாக தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பதவியை குமாரசாமிக்கு தருவதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதையடுத்து தேவகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர். இரு கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைகள் சேர்ந்து மொத்தம் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இந்த கூட்டணிக்கு கிடைத்தது.

இதை தொடர்ந்து கவர்னர் மாளிகை சென்ற சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் புதிய அரசு அமையும்வரை முதல்வர் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் கூட்டாக சித்தராமையா, குமாரசாமி தலைமையில் ராஜ்பவன் சென்று ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அவர்களின் கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்ட ஆளுநர் பதில் ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில் பாஜவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மத்திய அமைச்சர் அனந்த்குமார் தலைமையில் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து உரிமை கோரினர். 104 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதால் தங்களை முதலில் ஆட்சி அமைக்க அழைக்கும்படியும், பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு 7 நாள் அவகாசம் அளிக்கும்படியும் கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தையும் ஆளுநர் வாங்கி வைத்துக்கொண்டார்.

ஆட்சி அமைக்க இரு கட்சியினர் உரிமை கோரும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், கூவத்தூரில் எம்எல்ஏக்களை தங்கவைத்து அதிமுக அரசு பாதுகாத்தது போன்று தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க ஆந்திரா அல்லது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பிவைக்க காங்கிரஸ், மஜதவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க பாஜ மேலிடம் சார்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திரபிரதான், நட்டா ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். மேலும் பிரதமர் மோடியிடம் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தடுத்த அரசியல் நகர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெரும்பான்மையில்லாத பாஜ, எதிர்தரப்பில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி செய்யவே ஆளுநரை சந்தித்து கால அவகாசம் கோரியுள்ளதாக சித்தராமையாவும், குமாரசாமியும் குற்றம்சாட்டிள்ளனர். ஜனநாயக உரிமைப்படி மெஜாரிட்டி உள்ள எங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்றால் சட்டபோராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். ஆளுநர் வஜூபாய் வாலா, குஜராத் மாநிலத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இதனால் பாஜவுக்கு சாதகமாக செயல்படுகிறார். பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை என்று காங்கிரசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top