கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு .

முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, சுடரேற்றி அஞ்சலி செய்தல் மற்றும் இந்து, கிறிஸ்தவ மத இறை பிரார்த்தனைகளும், மாணவர்களது அமைதி வேண்டிய தெய்வீக தேவார திருவாசகங்களும், கிறிஸ்தவ கீதங்களும் இடம்பெற்றிருந்தன.
இதன்போது, முள்ளிவாய்க்காலில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது சிறார்கள் உட்பட பெருமளவான மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த வேளை ஈழக்கவிஞன் புதுவை இரத்தினதுரை இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் தமிழர்களது நிலையை எடுத்துக்கூறி உடனடியாகத் தலையிட்டுப் போரை நிறுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு எடுத்துரைக்கும் கவிதையும் அவரது குரலிலேயே இசைக்கவிடப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் தமிழன் படும்பாட்டைச் சித்தரிக்கும் காணொளிகளும், கவிதைப் பின்னணியுடன் திரையில் காண்பிக்கப்பட்டது.< மேலும் நிகழவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, மதத் தலைவர்கள், கரைச்சிப்பிரதேச சபை உறுப்பினர்கள், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை உறுப்பினர்கள், மாணவர்கள், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களது உறவினர்கள் என பலரும் கலந்த கொண்டுள்ளனர்.