குழந்தை உயிரிழப்பு! பெற்றோரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு ..

கனடாவின் Burlington பகுதியில் நின்ற ஒரு காருக்குள் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கவனிப்பாரற்று விடப்பட்டதால் உயிரிழந்த பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. கனடாவின் Burlington பகுதியில் நின்ற ஒரு காருக்குள் ஒரு குழந்தை கிடப்பதைக் கண்ட சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசாருடன் வந்த அவசர உதவிக் குழுவினர் தங்களாலானமட்டும் முயற்சி செய்தும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த இடத்திலேயே குழந்தை இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர். ஆய்வாளர் Anthony Odoardi கூறும்போது ‘இந்த சம்பவம் எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது, மரணம் ஏற்படும் எந்த சூழலுமே வருத்தமடையச் செய்யும் என்றாலும், ஒரு குழந்தை இறந்தது எங்களை மிகவும் கலங்கச் செய்துள்ளது, எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.
அதிக வெப்பத்தின் காரணமாக குழந்தை இறந்ததா என்று கேட்டபோது அது குறித்து பொலிசார் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நேற்று 28 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும் என கனடா வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியிருந்தது. குழந்தையின் உறவினர்களை தேடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பின்னரே குழந்தை இறந்ததன் காரணம் தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.