கோடரியால் தாக்கி பெற்றோரை கொலை செய்த கொடூரன் .

தென்னாப்பிரிக்காவில் மில்லியனர் ஒருவரின் மகன் தமது பெற்றோர் மற்றும் சகோதரரை கோடரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் தண்டனை பெற்றுள்ளார். குறித்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரது சகோதரி உயிர் தப்பியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் மார்ட்டின் வான் ப்ரேடா(54). இவரது மகன் ஹென்றி வான் ப்ரேடா(23) கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது தந்தை மற்றும் தாயார் தெரசா(55), சகோதரர் ரூடி(21), சகோதரி மர்லி ஆகியோர் மீது கோடரியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் சகோதரி மட்டும் குற்றுயிராக மீட்கப்பட பெற்றோரும் சகோதரரும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து 18 மாதங்களுக்கு பின்னர் ஹென்றி வான் ப்ரேடா கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.< குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சிராஜ் தேசாய் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். முன்னதாக தாம் கழிவறையில் இருந்தபோது முகமூடி அணிந்த நபர் ஒருவர் குடியிருப்புக்குள் நுழைந்து கோடரியால் தமது பெற்றோர் உள்ளிட்ட சகோதரர்களை தாக்கியதாகவும், தாம் அவருடன் மோதியதில் தம்மை தாக்கிவிட்டு தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சம்பவத்திற்கு பின்னர் ஹென்றி உடனடியாக உதவிக்கு அழைப்பு விடுக்காமல், ஏன் காதலிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மட்டுமின்றி சம்பவத்திற்கு பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னரே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மார்ட்டின் வான் ப்ரேடாவின் சொத்துமதிப்பு சுமார் 16 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. சொத்து தொடர்பில் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த படுகொலைக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் ஹென்றி வான் ப்ரேடா மீதான தண்டனை விபரத்தை இந்த வாரம் நீதிபதி சிராஜ் தேசாய் அறிவிப்பார் என கருதப்படுகிறது.