India

சசிகலா இனி என் முன்னாள் சகோதரி ஜெயலலிதாவின் உயிருக்கு 3 முறை குறி : திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு.

மன்னார்குடி: சசிகலா இனி என் முன்னாள் சகோதரி. ஜெயலலிதா உயிருக்கு 3 முறை குறி வைக்கப்பட்டது. அதை முறியடித்தவன் நான் தான். தினகரனின் போலி வேடம் விரைவில் கலையும் என திவாகரன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தில் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்ததையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். திடீரென திவாகரன் அம்மா அணி என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த வகையிலும் தாங்கள் பயன்படுத்தக்கூடாது. எனது அக்கா, எனும் உரிமை கோருவதையும் நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனது கட்சி அலுவலகத்தில் நேற்று திவாகரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் தினகரன் மற்றுமொரு பிளாக்மெயில் அரசியலில் இறங்கி உள்ளார். நோட்டீஸ் வழங்கியதால் எங்களது அரசியல் பயணம் நிற்காது. எனக்கு நோட்டீஸ் அனுப்பியதன் பிறகு தான் நான் நிம்மதியாக இருக்கிறேன். மன்னார்குடி மாபியா என்று பேசி வந்தவர்கள் இனி அப்படி பேசமாட்டார்கள் அல்லவா. சசிகலாவின் தம்பி என்ற காரணத்தினால் தான் மத்திய அரசின் வருமானவரித்துறை சோதனைக்கு ஆளானேன். இவர்கள் செய்த தவறுக்கு 33 வருடமாக நான் மன்னார்குடி மாபியா என்ற பழியை சுமந்து வருகிறேன். மற்றவர்களாக இருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்.

மன்னார்குடி மாபியா கும்பல் என்ற கெட்ட பெயர் வந்ததற்கு 2 காரணங்கள் தான். ஒன்று தினகரன் மீது வந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கு. இன்னொன்று வளர்ப்பு மகன் என ஒருவரை அறிமுகம் செய்து அவருக்கு ஆடம்பர திருமணம் நடத்தியது. இந்த 2 காரணங்களால் தான் கெட்ட பெயர் வந்தது. அதற்கு நான் காரணம் இல்லை. சசிகலாவின் சகோதரன் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இனி சசிகலா எனக்கு சகோதரி அல்ல. முன்னாள் சகோதரி தான். சசிகலாவிடம் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரை திட்டமிட்டு பிரித்த தினகரன், தற்போது என்னிடம் தனது சித்து விளையாட்டை காட்டியுள்ளார்.

தமிழக முதல்வராகலாம் என்று தினகரன் காணும் கனவு ஒரு போதும் பலிக்காது. பலிக்கவும் விட மாட்டேன். ஜெயலலிதாவின் உயிருக்கு மூன்று முறை திட்டமிட்டு குறிவைக்கப்பட்டது. அப்போது மூன்று முறையும் ஜெயலலிதாவை காப்பாற்றியவன் நான். அதிமுகவிற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து உள்ளேன். அதனை தொண்டர்கள் அறிவார்கள். எனது ரத்த உறவுகள் மட்டும் இப்போது என்னிடம் உள்ளனர். சசிகலா வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர் அதனால் அவர் இப்போது எங்கள் சொந்தம் இல்லை.

தினகரன் எனது அக்கா மகன். அவர் என் ரத்த உறவுமில்லை. ஒரு வேளை நான் இறந்தால் சசிகலாவுக்கோ அல்லது தினகரனுக்கோ துக்கம் இல்லை. தனிப்பட்ட முறையில் சசிகலாவை நான் விமர்சனம் செய்ய மாட்டேன். ஆனால் தேர்தல் காலங்களில் அவர் தினகரனுக்கு ஆதரவாக இருந்தால் அப்போது சசிகலாவை மிக கடுமையாக விமர்சனம் செய்வேன். நான், அரசியலில் தள்ளப்பட்டுள்ளதை அரசியல் தண்டனை என்று நான் கருதுகிறேன். அரசியலுக்கு நானாக தேடி விரும்பி வரவில்லை.

இனி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கிற தொண்டர்களை ஒரு அணியில் சேர்க்க முயற்சிகளை எடுத்து வருகிறேன். தினகரனின் போலி வேடம் விரைவில் கலையும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர். அவர் எமர்ஜென்சி மூலம் அரசியலுக்கு வந்தவர். பக்குவப்பட்டவர். அவர் தினகரனைப்போல யாரையும் 3ம் தரமாக விமர்சிக்க மாட்டார்.

சசிகலா படம் அகற்றம்

சசிகலா படத்தை திவாகரனின் அம்மா அணியினர் பயன்படுத்த கூடாது என்று சசிகலாவின் வழக்கறிஞர் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து நேற்று முன்தினம் திவாகரன் கட்சி அலுவலகம் உள்பட அனைத்து விளம்பர போர்டுகளிலும் உள்ள சசிகலா படத்தை அகற்றி விட்டு புதிய போர்டுகளை வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அக்கட்சியினர் இரவோடு இரவாக சசிகலா படம் போட்ட போர்டுகளை அகற்றி விட்டு புதிய போர்டுகளை வைத்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top