சரத் பொன்சேகா மகிந்த தரப்பை செல்லாக் காசுகள் என விமர்சித்துள்ளார்..

மக்கள் நிராகரித்த செல்லாக்காசுகளுக்கு மீண்டுமொரு முறை ஏமாற்றமடைய வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினரை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா விமர்சித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், இந்த அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த காலங்களில் அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்ததை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்நிலையில் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது போயுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது அரசாங்கம் என்ற வகையில் சில தீர்மானங்கள் எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும், தற்போது தவறுகளை உணர்ந்து எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் செயற்படுகின்றோம்.
ஆனால், மக்கள் நிராகரித்த செல்லாக்காசுகளுக்கு மீண்டுமொரு முறை ஏமாற்றமடைய வேண்டாம். அந்த கசப்பான கடந்த காலத்தை மறக்க வேண்டாம் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். முன்னதாக மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து செயற்படுகின்றனர் என்றும், இராணுவத்தினரை அவர்கள் காட்டிக் கொடுக்கின்றார்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
“தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார்”. இந்த அரசாங்கம் இராணுவத்தினரை இலக்கு வைப்பதாக மகிந்த சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அதிரடியாக கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.