ஜனாதிபதிக்கு எதிராக கருத்து: 12 வயது சிறுவனை கைது செய்த பொலிஸ் .

ரஷ்யாவில் ஜனாதிபதி புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த 12 வயது பாடசாலை மாணவனை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புடின் நான்காவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமது குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் உள்ள சாலையானது மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக சிறுவன் Egor Pryanishnikov கூட்டத்தின் மத்தியில் பேசியுள்ளார்.
இதனையடுத்து கூட்டத்தின் நடுவில் இருந்து வலுக்கட்டாயமாக சிறுவனை கைது செய்த பொலிசார், பாடசாலை சிறுவனை விலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கண்டு அதிர்ச்சியுற்ற போராட்டக்காரர்கள், வெட்கம் வெட்கம் என கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தையை வரவழைத்த பொலிசார், அவருடன் சிறுவனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த குறித்த சிறுவன், புடினுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள நான் ஏன் அஞ்ச வேண்டும். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வது ஒரு சராசரி குடிமகனின் உரிமை அல்லவா என கேள்வி எழுப்பியுள்ளார்.