ஜனாதிபதியின் அமைச்சுப் பதவி மகிழ்ச்சியில் மனோ கணேசன்.

இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் புதிய அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வசமிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுப் பதவியே மனோ கணேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “ஜனாதிபதியிடமிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். அவ்வாறு வந்தவுடன் குறித்த அமைச்சுப் பதவி தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முன்னதாகவே எனது அமைச்சுப் பதவிக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்பட்டது.தற்போது ஜனாதிபதியின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சுப்பதவி எனக்கு வந்ததால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் எனது அமைச்சுக்கே வரும்.ஆகவே இதை நல்ல முறையில் பயன்படுத்தி சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படும்.” என்று அமைச்சர் மனோ குறிப்பிட்டார்.