News

தமிழன் கொத்து கொத்தாக செத்து மடிந்த ஈழப் போரின் இறுதி நிமிடங்கள்!

ஈழப் போரின் இறுதி நிமிடங்களின் வரலாற்றை சுமந்து மௌனமாக அசைந்து கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்கால். துள்ளி எழுந்த அலைகள் துயரை சொல்ல முடியாது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. மே 18 என்றதுமே பல ஆயிரக்கணக்கான உயிர்களின் இரத்தம் தேய்ந்த வரலாறுதான் கண் முன் தேன்றுகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை ஈழத்தமிழர்களின் இரத்தச்சக்தியால் வரையப்பட்ட மறக்க முடியாத சோகம்.

எத்தனையோ உறவுகளை இழந்தும், வலிகளையும் சுமந்தும் ஈழத்தமிழன் பல நாடுகளில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றான். கடந்த 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட இந்த மாபெரும் இனப்படுகொலைகளை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் உலகம் முழுதும் இன்று கண்ணீருடன் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

போர் கொடூரமானது, ஆனால் உலக இனங்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றன. இதற்கு தமிழனும் விதிவிலக்கல்ல. தமிழர்கள் தமது உரிமைகளை போராடியே பெற்றனர். உலக வரலாற்றில் தமிழன் பல்லாயிரம் போர்களை சந்தித்திருக்கிறான். ஆனால் முள்ளிவாய்க்காலில் நடந்தது போர் மட்டுமே அல்ல அது பல சக்திகள் இணைந்து மேற்கொண்ட ஒரு இன அழிப்பு. இந்த போரில் இனப்படுகொலை நடந்தது என்று ஐக்கிய நாடுகள் கூறினாலும் ஆரம்பத்தில் இந்த விடயத்தில் அது காட்டிய அக்கறை படிப்படியாக குறைந்து விட்டது.

உலக வல்லரசுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய தரப்பினரை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விட்டதால், தலையீடுகளை குறைத்துக் கொண்டன. முள்ளிவாய்க்கால் போர் நடந்து பல வருடம் உருண்டு ஓடிவிட்ட இந்தத் தருணத்தில் போரை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கே பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை. இதனை தவிர பலர் தடுப்பு முகாமகளிலும், சிலர் அரசியல் கைதிகளாகவும், இன்னும் சிலர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகவும் இருக்கின்றனர். இவற்றுக்கு இன்னும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

எமது தாயக உறவுகளில் லட்சக்கணக்கானவர்கள் புலம் பெயர் நாடுகள் தஞ்சமடைந்துள்ளனர். தாயகத்தில் எஞ்சியுள்ள தமிழர்கள். நில மீட்பு, காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட உறவுகளை தேடி போராடிக் கொண்டிருக்கின்றார். எஞ்சிய மக்களையும் அழிப்பதும் அந்த மக்களின் நிலத்தை பறிப்பதுமே போருக்குப் பிந்தைய மறுவாழ்வாக காணப்பட்டது. நல்லாட்சியில் விடிவு பிறக்கும் என்று எண்ணிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எது எப்படி இருந்த போதிலும் கொத்துக்கொத்தாக மண்ணில் மடிந்த தமிழன் வரலாறு நினைத்து பார்க்க முடியாத சோகம்.

பசியின் வலியும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற வேதனையான தருணம். முள்ளிவாய்க்கால் பரப்பில் அன்று நின்றிருந்த தருணம் இன்றைய நினைவேந்தல் தினத்தில் கண் முன் வந்து செல்லுகின்றது. கடந்து விட்டது. ஆனால், தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்க வில்லை. விடுதலை என்பது மனிதனுக்கு என்றுமே தணியாத தாகம். எஞ்சியுள்ள வாழ்க்கையையேனும் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் கானல் நீராகி வருகிறது.

உண்மையில் அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? உரிமைகளை கோருவது குற்றமா?. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தொடர்ந்து இன்னல்கள். தமது எதிர்காலம் தொடர்பில் சமிக்ஞையும் புலப்படாதிருப்பது தமிழ் மக்களை மேலும் விரக்தியடையச் செய்துள்ளது. தமிழ் மக்களை இன்னும் இரண்டாம் தரப் பிரஜைகளாக பார்க்கப்படும் நிலைமை தொடர்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் இனப்படுகொலைக்கான நியாயம் கிடைக்க வேண்டும். அந்த நிலையேற்படும் போதே எம் உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடையும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top