News

தமிழ் மக்களின் வாக்குகளை பெற மைத்திரியின் புதிய முயற்சி .

ஜனாதிபதி மைத்திரி ஆட்சிபீடமேறுவதை, சிறுபான்மை மக்களின் வாக்குகளே தீர்மானித்தன. அந்தவகையில், அடுத்த தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறிவைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காய்நகர்த்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தற்போதைய தவணையோடு ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரி ஓய்வுபெறுவாரென தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது.

எனினும், ஜனாதிபதியின் பதிலை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில், தான் 2020ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரி தனது மே தின உரையில் மட்டக்களப்பு மண்ணில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சமகால விவகாரங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி மைத்திரி அதனை நிறைவேற்றவில்லை. அந்தவகையில், இனியும் நிறைவேற்றப்போவதில்லையென அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

மாறாக ஜனாதிபதியின் சொந்த ஊரான பொலனறுவை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதே அவரது இலக்கு என்றும் குறிப்பிட்டார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில், கோட்டாவை தமிழ் மக்கள் புறக்கணிப்பர். இதனை நன்கறிந்த மைத்திரி சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறிவைத்தே, தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் மட்டக்களப்பில் வைத்து தனது முடிவை அறிவித்துள்ளாரென அரியநேத்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top