News

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை! பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு .

பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்ட 9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தின நிகழ்வுகள் மே 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஹைட் பார்க் மைதானத்தில் சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்து உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன அழிப்பின் சாட்சியாக முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்வரை இருந்து மீண்டு வந்த உறவு சுடரினை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வதையுண்டு இறந்த எம் மக்களை நினைவு கூர்ந்தனர். அதனைத் தொடர்ந்து இன அழிப்பினை உருவகப்படுத்தும் இளையோரின் நடன, நாடக நிகழ்வுகளும் கவிதை, பாடல்களும் இடம் பெற்றன.

இளைய தலைமுறையினர் பலர் அரசியல், பண்பாட்டு அம்சங்கள் உட்பட பல முக்கிய விடயங்களில் பொறுப்பேற்று பங்களித்தமை தலைமுறைகள் கடந்தும் உரிமைக் குரல் புலம்பெயர் நாடுகளில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது. அத்துடன் பிரித்தானியாவின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டு உரையாற்றினர். கலந்து கொள்ள முடியாதவர்கள் காணொளி வடிவிலும் தமது செய்தியாகவும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன் கொடுமைகளுக்கு நீதி வேண்டும் என்று மீள உறுதிப்படுத்தினர்.

முன்னாள் வட அயர்லாந்துக்கான அமைச்சரும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உப தலைவரும் சிப்பிங் பார்னெட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தெரசா வில்லியர்ஸ் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை அரசு தான் உறுதியளித்தவாறு குற்றமிழைத்தவர்களுக்கெதிரான நீதி விசாரணையை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் சிறிலங்கா அரசு மனிதவுரிமை கழகத்தின் தீர்மானத்தில் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவரான ஜெரமி கோர்பின் “இந்த நாளில் தானும் துயரைப் பகிர்ந்து கொள்கின்றேன், 80ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுடன் தொடர்ந்து பயணிக்கிறேன்.

எமது வெளியுறவுக் கொள்கை மனித உரிமையை மீறும் நாடுகளுக்கு மனித உரிமைக் கழகத்தில் ஒரு காத்திரமான பாத்திரத்தை வகிக்க வேண்டும். ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டும், பொருளாதார தடைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் தொழில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் விடயங்களை கொண்டு வந்தது போல எதிர்வரும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இலங்கை தொடர்பான அம்சங்களை உள்ளடக்குவேன்” என உறுதியளித்தார்.

கெம்பக் (CAMPACC) அமைப்பின் பிரதிநிதியான லெஸ் லெவிடோவ் தனது உரையில், 2000ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் எவ்வாறு சமூகங்களின் அரசியல் செயல்பாடுகளை பாதிக்கின்றது. தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை உடன் நீக்கப்பட வேண்டும், உலகலாவிய நியாயாதிக்கத்தினைப் பயன்படுத்தி இங்கு வசிக்கும் அல்லது வர முனையும் குற்றம் புரிந்த சிறிலங்கா அதிகாரிகள் மீது கைது செய்யும் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உப தலைவரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான கிங்ஸ்டன், பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் டெமோகிராடிக் கட்சியைச் சேர்ந்தவருமான சேர் எட் டேவி அவர்கள் “தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலை, இது கட்டம் கட்டமாக பல ஆண்டுகளாக இடம் பெற்றது. இது தொடரக் கூடாது, அதற்கான நீதி விசாரணை அவசியம். 2010ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டு வந்த GSP Plus வரி சலுகையினை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டேன்.” என தெரிவித்தார். ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாது இருப்பதனால் மீண்டும் வழங்கப்பட்ட GSP Plus வரி சலுகையினை நிறுத்துவதற்கான வேலைத் திட்டங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உப தலைவர் ரொபர்ட் ஹாபன் “இந்த மிக முக்கியமான நினைவு கூரும் நாளில் நாம் தமிழ் மக்களின் சுடரினை அணையாதிருக்க கரம் கொடுக்க வேண்டும். இன அழிப்பு கொடுமைக்குள்ளாகி பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவு கூறுகின்றோம். தமிழ் மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்துடையவர்கள், நாம் ஒரு நாளும் அவர்களை மறந்து விடக்கூடாது.” என்று கூறினார் .

தொழில் கட்சியின் நிழல் நிதி அமைச்சரான ஜோன் மக்டோனெல் “9ஆம் ஆண்டு கடந்த பின் நிகழும் இந்த நினைவு கூறல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைக்குள்ளாக்கப்பட்டு மோசமான அநீதிகள் இழைக்கப்பட்டது, பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவில்லை, பலர் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர், தமிழர்களின் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக சாத்தியமான எல்லா முயற்சிகளையும் எடுப்போமென தற்போது எதிர்கட்சியாகவும் நாம் ஆட்சியமைக்கும்போதும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க தொழில் கட்சி சார்பாக நான் உறுதியினை வழங்குகின்றேன். சாத்தியமான எல்லா சர்வதேச முறைமைகளையும் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற உதவுவோம்” என தன் செய்தியில் உறுதியுரைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரான போல் ஸ்கல்லி அவர்கள் தெரிவிக்கையில் “நான் கடந்த ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மாரை சந்தித்தேன். 9 வருடங்கள் கடந்த பின்னரும் தம் பிள்ளைகளுக்கும் கணவருக்கும் என்ன நடந்தது என தெரியாது தவிப்பதை அவர்கள் கண்களில் அறியக் கூடியதாக இருந்தது. சிறிலங்காவிற்கு உயர்ந்த பட்ச அழுத்தத்தை கொடுக்குமாறு எம் வெளியுறவு அமைச்சருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம், அத்துடன் பன்னாட்டு சமூகத்தை அணி திரட்டி சிறிலங்கா அரசு தனக்கெதிராக நிலைமை மோசமடைவதை உணரும் வகையில் செயல்படுமாறும் கோருவோம்.

பன்னாட்டு சமூகம் சிறிலங்காவை பாதுகாப்பு சபைக்கு கொண்டு போக வேண்டுமா, அவ்வாறாயின் பூகோள அரசியல் தடங்கல்கள் எவ்வாறிருக்கும் என ஆராய வேண்டும். ஒரு வருடத்திற்கும் குறைந்த காலமே உள்ளது. ஜெனீவாவிலும் பாராளுமன்றிலும் மற்றும் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்குமுள்ள எம் நண்பர்களை திரட்டி செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top