India

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு..

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று இரவு தெரிவித்தார். மக்களின் 102 நாள் போராட்டத்திற்கு பின் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை 2வது யூனிட் விரிவாக்கத்துக்கு அனுமதிக்கக் கூடாது எனக்கோரி தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த பிப்ரவரி 12ம் தேதி காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஆலையை முற்றிலும் மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, சில்வர்புரம் உள்ளிட்ட 17 இடங்களில் போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் 100வது நாளான கடந்த 22ம் தேதி போராட்டக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அப்போைதய கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டார். போராட்டத்தை ஒடுக்குவதற்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும் தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட பல அலுவலகங்கள் தீக்கிரையாகின. அப்போது போலீசார் எந்திர துப்பாக்கியால் சராமரியாக சுட்டனர்.

இதில் முதல் நாளே 2 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 2ம் நாளாக அண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். சிகிச்சையிலிருந்த மேலும் 2 பேர் இறக்கவே பலி எண்ணிக்கை 13 ஆனது. இதையடுத்து துப்பாக்கி சூட்டிற்கு காரணமாக தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் ஆகிய இருவரும் மாற்றப்பட்டு கலெக்டராக சந்தீப் நந்தூரி, எஸ்பியாக முரளி ராம்பா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிலைமையை சமாளிக்கவும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, டேவிதார், ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் ஐஜிக்கள் சைலேஷ்குமார் யாதவ், வரதராஜூ, சண்முக ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி அனுப்பப்பட்டனர்.

புதிய கலெக்டர், எஸ்பி ஆகியோர் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று இரவு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று நகரில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இனி எந்த சூழ்நிலையிலும் அந்த ஆலை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனம் இயங்கக்கூடாது என்பதில் அரசின் முடிவு தெளிவாக உள்ளது.

இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதியை சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. தற்போது மின்சாரம், தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்காது. அரசின் முடிவை ஏற்று பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்களை பலி கொடுத்த நிலையில், 102 நாள் ெபாதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1.65 கோடி பொது சொத்து சேதம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீ வைப்பு சம்பவங்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். 83 பேர் லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ் தரப்பில் 10 பெண் போலீசார் உள்பட 34 பேர் காயமடைந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர். தீ வைப்பு சம்பவங்களில் 24 கார்கள், 74 பைக்குகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 35 கார்கள், 11 பைக்குகள் பாதி சேதமடைந்தன. வாகனங்களின் சேதமதிப்பு ரூ.1 கோடியே 36 லட்சம் என்றும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களின் சேதமதிப்பு ரூ.29 லட்சம் என்றும் பேட்டியின் போது கலெக்டர் தெரிவித்தார்.

சுப்ரீம் ேகார்ட் இன்று விசாரணை?
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜிஎஸ்.மணி என்பவர் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,”துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கலெக்டர், எஸ்பி, போலீஸ் மாநில டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இன்டெர்நெட் தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரியவருகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top