India

தூத்துக்குடியில் முழு அமைதி திரும்பியது : 144 தடை உத்தரவு வாபஸ்..

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு அமைதி திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவு நேற்று காலை முதல் வாபஸ் பெறப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக இயங்காது என்று எழுதி கையெழுத்திட்டு தரத் தயாரா? எனக்கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 22ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து 21ம் தேதி இரவு முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயம்அடைந்துள்ளனர். இதில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பதற்றம் தணியாததால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்ததைத் தொடர்ந்து மாவட்டத்தில் சகஜ நிலை திரும்பத் துவங்கியது. நேற்று முன்தினம் சுமார் 80 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பியது.

நேற்று காலை 8 மணி முதல் 144 தடை உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டதால் அனைத்து பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டன. பிரச்னைக்குரிய ஒரு சில பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கடைகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டன. திரையரங்குகள் இயங்கின. மக்கள் தங்களின் வழக்கமான பணிகளை இயல்பாக கவனிக்கத் துவங்கினர்.

நேற்று காலை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிகிச்சை பெற்று வருவபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் அமைச்சர் மற்றும் அதிமுகவினரிடம், உங்களுக்கு இப்போதுதான் எங்கள் நிலை தெரிகிறதா? வேடிக்கை பார்க்க வந்தீர்களா அல்லது இன்னும் எத்தனை பேர் சாகப்போகிறார்கள் எனக்காண வந்தீர்களா? இப்போது வந்ததற்கு பதில் வராமலேயே இருந்திருக்கலாம். நீங்கள் எங்களிடம் பேசவே தகுதியில்லாதவர்கள் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காது என்று கூறி அமைச்சர் சமாதானப்படுத்தினார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடத்தயாரா? ஸ்டெர்லைட் மூடப்படும் என்று உறுதியளித்து எழுதி கையெழுத்து போட்டுத்தர தயாரா என அமைச்சரிடம் சிலர் வாதிட்டனர். அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் உள்ளிட்டவர்கள் திணறினர். இதனால் அங்கு அனுமதிக்கப்பட்ட அனைவரையும் பார்த்து ஆறுதல் தெரிவிக்க முடியாமல் அமைச்சர் திரும்பிச் சென்றார். சம்பவம் நடந்து 6 நாட்களுக்குபின் அமைச்சர் வருவதால் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சரின் கார் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றபோதும் நூற்றுக்கணக்கான போலீசார் வாகனங்களில் பாதுகாப்பிற்காக சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் டிஜிபி டிகே.ராஜேந்திரன், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பொது அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளவேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். இதற்கிடையே இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி வந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பின்னர் அதிகாரிகளுடன் மாவட்டத்தில் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனை நடத்துகிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top