தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை: 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு…

மதுரை: தூத்துக்குடியில் இணைய தள சேவை முடக்கம் குறித்து மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க ஆணையிடப்பட்டுள்ளது. சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தேவை என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேல் சிகிச்சை தேவைப்படுவோரை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க, அமைதி திரும்ப நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளது. சட்ட உதவி மையம் எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 6-ல் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் 6 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி நிலைமையை கண்காணித்து ஐஏஎஸ் அதிகாரிகள் டேவிதார், ககன் தீப் சிங் பேடி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.