India

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் முழுஅடைப்பு, மறியல் 7 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 7 ஆயிரம் பேர் கைது..

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 7 திமுக எம்எல்ஏக்கள் உட்பட 7 ஆயிரம் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதி வழியில் போராடிய பொதுமக்கள் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி, திமுக மற்றும் அனைத்துகட்சி சார்பில் முழுஅடைப்பு, மறியல் போராட்டம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதன்படி, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளில் 100% கடைகள் திறக்கப்படவில்லை. திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம்,
ராயபுரம், காசிமேடு, தங்கசாலை, கொடுங்கையூர், வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், புளியந்தோப்பு, புழல், லட்சுமிபுரம், செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.

நகரின் பல இடங்களில் முழு அடைப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து ஆட்டோவை இயக்கவில்லை. இதனால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டல் சாப்பாட்டை நம்பி இருந்த பாச்சுலர்ஸ்கள் உணவு இல்லாமல் திண்டாடினர். திறக்கப்பட்ட ஒரு சில கையேந்தி பவன்களிலும் ஒரு சில மணி நேரங்களிலேயே உணவுகள் விற்று தீர்ந்து விட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
போலீசாரையும், தமிழக அரசை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்ட 7 திமுக எம்எல்ஏக்கள் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் நேற்று காலை சைதை பஜார் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், கண்ணன், மு.ராசா, மதியழகன், பெருங்குடி ரவிச்சந்திரன், என்.சந்திரன், குணாளன், மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், வாசுகி, சைதை சம்பத், இரா.பாஸ்கரன், கோல்டு பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
* காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் நேற்று குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குன்றத்தூர் போலீசார் கைது செய்தனர்.

* சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், துக்காராம், பரந்தாமன், புழல் நாராயணன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தபால்பெட்டி சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்து, மூலக்கடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் போலீசார், அனைவரையும் கைது செய்தனர்.

* பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தீனதயாளன், மதிமுக மாவட்ட செயலாளர் மகேந்திரன், நாசர், ரஜினி, திமுகவினர் முஜிபுர் ரகுமான், வெங்கடேசன், ரமேஷ், இளங்கோ, ஜோசப் அண்ணாதுரை உட்பட 700க்கும் மேற்பட்ட திமுக கூட்டணி கட்சியினர் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஊர்வலமாக நடந்து சென்று குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
* தாம்பரம் தொகுதி திமுக சார்பில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் விஜய்ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், மனிதநேய மக்கள் கட்சி சலீம், திமுகவினர் ஜோதிகுமார், பெருங்களத்தூர் சேகர், சிட்லபாக்கம் சுரேஷ் உட்பட 200க்கும் மேற்பட்ட திமுக கூட்டணி கட்சினர் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

* பம்மல் நகர திமுக சார்பில் நகர திமுக செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு பல்லாவரம் குன்றத்தூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.

* குரோம்பேட்டை சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில், குரோம்பேட்டை காமராஜ் தலைமையில் கருணாகரன், ஜெயக்குமார், தமிழ்மாறன் உட்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

* பரங்கிமலை கன்டோன்மென்ட் நகரிய திமுக சார்பில் நகரிய செயலாளர் டி.பாபு தலைமையில் பட்ரோடு – பூந்தமல்லி சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வர்த்தகர் அணியை சேர்ந்த சி.முத்து, வட்ட செயலாளர்கள் செங்கை மோகன், செட்ரிக் ஜான், இசட்.பாபு, டான்சி மோகன், சங்கர், கேசிஎஸ்.ராஜேந்திரன், டி.எஸ்.ராஜா ஆனந்தகுமார், இளைஞரணி தினகரன், சுனில், சுதாகர், கே.மாறன், ஆல்பர்ட், மகளிரணி கே.சாந்தி, எஸ்.சாந்தி, எஸ்.சத்யா. ராமு, ஸ்டீபன், ரவி, காங்கிரஸ் சார்பில் பொன்சிவசெல்வம் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில், மணலி மார்க்கெட் சந்திப்பில் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.டி.துரை, ஸ்டாலின், முத்துசாமி, கோபி உட்பட 100க்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.
* திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் நடந்த மறியலில் நிர்வாகிகள் முத்தையா, குறிஞ்சி கணேசன், இளவரசன், சரவணன், ஆசைத்தம்பி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* திருவொற்றியூர் மண்டல வார்டு அலுவலகம் முன் முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் திரிசங்கு தலைமையில் திமுக நிர்வாகிகள் மணி, சேகர், ஏழுமலை, வஜ்ரவேலு உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.

* வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி சார்பில் தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை சந்திப்பில் பகுதி செயலாளர் மருதுகணேஷ் தலைமையில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் மதிவாணன், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

* ஆர்.கே.நகர் மேற்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.டி.மணி தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* வடசென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி திமுக சார்பில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமையில், பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன், விடுதலை சிறுத்தைகள் பகுதி செயலாளர் கல்தூண் ரவி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்கேபி நகர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி நிர்வாகி சுந்தரராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.

* ராயபுரம் பகுதி திமுக சார்பில், பகுதி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ராயபுரம் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்ட களத்தில் மணமக்கள்
சென்னை தண்டையார்பேட்டை தனியார் மருத்துவமனை அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாரி-தமிழரசி ஆகியோருக்கு திருமணம் நடந்தது. அப்போது, மண்டபம் அருகே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சாலை மறியல் நடத்தினர். இதைகேள்விப்பட்டு, புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் அந்த போராட்டத்த்தில் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் புதுமண தம்பதி உட்பட அனைவரையும் கைது செய்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top