India

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு : எடப்பாடி பதவி விலகக்கோரி மறியல் : ஸ்டாலின் உட்பட தலைவர்கள் கைது

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் மற்றும் எம்எல்ஏக்கள், அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், திரைப்படத்துறையினர், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தி, முதல்வர் அறை முன்பு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். திமுகவினரின்

போராட்டத்தால் தலைமை செயலகம் போர்க்களம் ஆனது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூட்டை கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரியும் அனைத்து கட்சி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது. போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுகை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. அனைத்து டெப்போக்கள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ராயப்பேட்ைட, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆட்டோக்களும் இயங்கவில்லை. பஸ்களும் போலீஸ் பாதுகாப்புடன் குறைவாகவே இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளில் பெருமளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னை அடுத்த மதுராந்தகம் பஜார் சாலையில் நடந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீசார் அவரை கைது செய்வதாக அறிவித்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றினர்.

அப்போது போலீஸ் வேனை சூழ்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் வேனை ஒரு அடி கூட நகர்த்த முடியாமல் திணறினர். கடும் போராட்டத்துக்கு மத்தியில் போலீசார் வேனை அப்புறப்படுத்தினர். நெல்லையில் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து சென்னை தி.நகர் பஸ் நிலையத்தில் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் தாடண்டர் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ தலைமையில் எழும்பூரில் இருந்து ஊர்வலமாக சென்றனர். இதில் கனிமொழி எம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சென்ைன வடக்கு மாவட்ட திமுக சார்பில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட ெசயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.இதேபோல, தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

1 லட்சம் போலீஸ் குவிப்பு
அனைத்து கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவித சம்பவத்தை தவிர்க்க முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் டெப்போக்கள் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top