தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் : டிஜிபி அலுவலகத்திற்கு வந்த அழைப்பால் பரபரப்பு..

சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காவல்துறை தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையை (டிஜிபி அலுவலகம்) நேற்று முன்தினம் இரவு சுமார் 8.45 மணியளவில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, தூத்துக்குடியில் வாழ்வாதாரம் வேண்டி போராடிய மக்களை உங்களது காவல் துறையினர் சுட்டுக் கொலை செய்துவிட்டனர். இது நியாயத்திற்காக போராடிய மக்களுக்கு நேர்ந்த அநீதி. ஆகவே, தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்பார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
உடனே போலீசார் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். து முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி அங்கு வரும் நபர்களை கண்காணிக்க உத்தரவிட்டனர். இதற்கிடையில், டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து, அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அந்த செல்போன் எண் மதுரையை சேர்ந்த மாரியப்பன் என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டிஜிபி கட்டுப்பாட்டில் இருந்துமதுரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் அந்த சிம்கார்டு மாரியப்பன் என்பவரது பெயரில் இருந்து. ஆனால் அவர், நான் யாருக்கும் போன் செய்யவில்லை, எனது சிம்கார்டு சில நாட்களுக்கு முன் தொலைந்து விட்டது எனக்கூறியதாக கூறப்படுகிறது. இருந்தபோதும், மாரியப்பனே போன் செய்து மிரட்டல் விடுத்துவிட்டு பொய் சொல்லலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் மாரியப்பனிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.