தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு கவர்னர் நேரில் ஆறுதல்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் அவர் நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 105 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார்.
காலை 10.40 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்த அவரை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு போலீஸ் தடியடியில் பலியான பேய்க்குளம் இருவப்புரத்தை சேர்ந்த செல்வசேகர் (வயது 42) வீட்டுக்கு கவர்னர் சென்றார். அங்கு அவர் செல்வசேகரின் தாய் மாசானம், சகோதரிகள் சாந்தா, சீதா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். கலவரத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, காயம் அடைந்தவர்களின் விவரம், காயத்தின் தன்மைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அங்கு சிகிச்சையில் இருந்தவர்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? நீங்கள் குணமாகும் வரை ஆஸ்பத்திரியில் இருந்து முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். காயம் அடைந்த அனைவரிடம் நலம் விசாரித்து விட்டு 12.40 மணிக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
மதியம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான கிருஷ்ணராஜ புரத்தை சேர்ந்த அந்தோணி செல்வராஜ், தாமோதர நகரை சேர்ந்த மணிராஜ் ஆகியோர் வீடுகளுக்கு கவர்னர் சென்றார். அங்கு அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, கண்காணிப்பு அலுவலர் டேவிதார், கலெக்டர் சந்தீப் நந்தூரி, கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், பாதுகாப்பு அதிகாரி துரை, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் சிவகாமிசுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ள கூடுதல் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அங்கு தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு தலைவர் ஜான்சன் தலைமையில் மீனவர்கள் வந்தனர். அவர்கள் கவர்னரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறும் போது, “கவர்னர் எங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் அனைவருக்கும் கைகொடுத்தார். அதே நேரத்தில் வேகமாக சென்று விட்டார். இதனால் கோரிக்கைகளை விளக்கி கூற முடியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். சிலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாக தெரிவித்தோம். அதற்கு அது போன்று எதுவும் நடக்காது. இது பற்றி முதல்-அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறினார்” என்று தெரிவித்தனர்.