India

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி கடந்த 22ம் தேதி பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ₹10 லட்சம் வழங்கும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த நிதி நேற்று முன்தினம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.

மேலும், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட போதும் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து சம்பவ இடத்துக்கு அதிமுக சார்பிலோ, தமிழக அரசு சார்பிலோ எந்த தலைவர்களும் செல்லாமல் இருந்தனர். ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், கமல்ஹாசன் ஆகியோர் அடுத்த நாளே சென்று பார்த்தனர். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை தூத்துக்குடி சென்று காயம் அடைந்தவர்களையும், சம்பவம் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டார். பின்னர் அவர் சென்னை திரும்பியதை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனம் இயங்கி வருகின்றது.
கடந்த 23.3.2013 அன்று, மேற்படி தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில், தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டில் தேசிய பசுமை தீர்ப்பாயம், 8.8.2013 அன்று ஆலையை இயக்குவதற்கு அனுமதியளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், ஜெயலலிதா 2013ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 9.4.2018 அன்று, அந்த விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஆலை இயங்கவில்லை. 24.5.2018 அன்று முதல், ஆலைக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தினால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நேற்று தலைமை செயலகத்தில் என்னையும், துணை முதல்வரையும், மூத்த அமைச்சர்களையும், தலைமை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கையும், தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இன்று (நேற்று) வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று முதல் தொடர்ந்து 23ம் நாட்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான அரசாணையையும் தமிழக அரசு உடனடியாக நேற்று மாலையே வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிறுவனத்துக்கு மறுபதிவு செய்ய தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. அதேசமயம் கடந்த 23ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மின் இணைப்பு துண்டிப்பதாக கடிதம் அனுப்பி, 24ம் தேதி மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி, அங்குள்ள அதிக மக்களின் விருப்பத்தின்படி ஸ்டெர்லைட் ஆலையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்து மூடுவதற்கு அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரவேற்பு

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் எஸ்பி முரளி ரம்பா, சப்.கலெக்டர் பிரஷாந்த், தாசில்தார் சிவகாமசுந்தரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன், இன்ஸ்பெக்டர் அரிஹரன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தனர். மேலும் ஆலையை மூடுவதற்கான அரசாணை நகல் ஆலையின் கேட்டில் ஒட்டப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை, வருவாய் துறை, பஞ்சாயத்து அலுவலர்கள் முன்னிலையில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை ஏற்கனெவே கடந்த மாதம் 9ம் தேதியே மூடப்பட்டு விட்டது. இப்போது அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே மாவட்டத்தில் அமைதி திரும்ப மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீண்டகாலமாக போராடி வந்த நிலையில் தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவை அடுத்து ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top