News

பல்லாயிரகணக்கான மக்களை காப்பற்ற தவறியமைக்கு இழப்பீடா முள்ளிவாய்க்கால் நினைவு தூபி?

எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என்ற அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம். விடுதலை புலிகளால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென மோசடியாக அப்பெயரை உபயோகித்துக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களிற்கும் விடுதலை புலிகளை சாட்சிக்கு அழைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.என ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு அரச படையினர் யுத்த தர்மங்களை மீறி செயற்பட்டு கிளிநொச்சியை கைப்பற்றியமையாலேயே அவ்வியக்கத்திற்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் சாதித்ததை தவிர வேறு எதையும் செய்திருக்கவில்லை. அதன் விளைவே மன்னார், வவுனியா, கிளிநொச்சி உட்பட முள்ளிவாய்க்கால் வரைக்கும் தம் சொத்துக்களை பெருமளவில் இழந்து ஏறக்குறைய வெறுங்கையுடன், பல கஸ்டத்தின் மத்தியில் முள்ளிவாய்க்காலில் நம் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இக்கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை, பல்லாயிரகணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும்படியும், தவறினால் தங்களின்; பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறும் 11.01.2009ல் பகிரங்க அறிக்கை மூலம் தமிழர் விடுதலை கூட்டணி கோரியிருந்தது.
அவர்கள் கோரிக்கையை பொருட்படுத்தாத நிலையில்,

தம்பி பிரபாகரன் அவர்களிற்கு 15.03.2009 திகதியில் 81ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களின் சாபத்திற்கு விடுதலைபுலிகளோ, அவர்களின் சந்ததியோ ஆளாகாமல் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருந்தேன். இறுதி மூச்சுவரை போராடுவதே இலட்சியமாக கொண்ட ஓர் அமைப்பு என்ற வகையில் எனது இக்கோரிக்கைக்கு செவி சாய்க்காமை பெரும் குற்றமாக எனக்கு தெரியவில்லை.

ஆனால், தைமாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர்களோ அல்லது 02.05.2009 அன்று அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையோ இரு சாராரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஓர் நட்பு நாட்டின் உதவியை பெற்று போர்நிறுத்தத்தை உடன் அமுல்படுத்தாவிட்டால் நாடு பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை கொடுத்திருந்தேன். இதற்கிடையில் சகல தமிழ்கட்சி தலைவர்களையும் 2009ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி 6.30 மணிக்கு அரசியல் நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதியால் கூட்டப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தவிர ஏனைய கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள், யுத்த நிறுத்தம், உணவு பிரச்சினை போன்றவை ஆராயப்பட்டன. ஜனாதிபதி அவர்கள் 55ஆயிரம் மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்றும், இன்னும் 85ஆயிரம் பேர் மட்டுமே வன்னியில் விடப்பட்டுள்ளார்கள் எனவும் கூற, அதை மறுத்து மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி கஸ்டப்படுகின்றார்கள் என்ற எனது கூற்றை மறுத்துரைத்த ஜனாதிபதி, பின்பு மூன்று லட்சம் மக்களுக்கும் சேர்த்து அரசு உணவு அனுப்புவதாக மிக்க கோபத்துடன் என்னிடம் கூறிவிட்டு எழுந்து சென்றமை அனைவரும் அறிந்தது;.
11.04.2009 அன்று இந்திய வெளிவிவகார செயலர் சிவ்சங்கர் மேனன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை உடன் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விட்டிருந்தபோது, அக்கடிதத்திற்கு பதிலாக யுத்தத்தை நிறுத்தினால்தான் வருவோம் என கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதை கண்டித்து 11.04.2009ல் மாவை சேனாதிராஜாவுக்கு நான் எழுதிய கண்டண கடிதத்தில் வெளிவிவகார அமைச்சரை சந்திக்காத அவரது தவறை சுட்டிக்காட்டியிருந்தேன். அதே காலப்பகுதியில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு புலிகளின் தமிழீழ கனவு பொசுக்கப்படும் என்று புதுவருட செய்தியாக இராணுவ தளபதியின் கூற்றும் பத்திரிகைகளில் பரவலாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இக்கட்டத்தில் மே மாதம் 7ம் திகதி 2009ம் ஆண்டு இலங்கை வந்த பிரித்தானிய பாராளுமன்ற குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ‘இந்திய தேர்தல் முடிவடைந்ததும் பாரிய அழிவிற்கான அபாயம் உள்ளதெனவும், அப்பாவி மக்களை உலக நாடுகள் காப்பாற்ற வேண்டும்’ எனவும் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. எம்மக்களை காப்பாற்ற தேடி வந்த வாய்ப்புக்கள் அத்தனையையும், விளைவுகளை சிந்திக்காது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை, குறிப்பாக தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர்கள் தட்டிக்கழித்தனர். ஏனைய கூட்டமைப்பின் பங்காளிகள் எதுவும் செய்ய முடியாமல் தவித்தனர். முதலாவதாக, இவர்கள் தம் பதவிகளை துறந்து அரசுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து சில விடயங்களை சாதித்திருக்க முடியும். அடுத்ததாக, பெரும் அனர்த்தம் ஏற்படும் என கூட்டமைப்பினர் அறிந்திருந்ததோடு, நானும் அரசுக்கு எச்சரிக்கை விட்டிருந்தும் அரசும் அதை பொருட்படுத்தவில்லை இதற்கு காரணம் விடுதலை புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற இறுமாப்பு அரசாங்கத்திற்கு இருந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை விருந்து வைக்க டெல்லிக்கு அழைக்கவில்லை. அவசர அழைப்பை ஏற்று டெல்லி சென்றிருந்தால் அவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களையும், போராளிகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருக்க கூடும். அந்த முயற்சியையும் இவர்கள் எடுத்திருக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்ற குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்தபோது, அடுத்த 10 நாட்களிற்குள் பெரும் அழிவிற்கு இடமிருப்பது பற்றி; நன்கு அறிந்திருந்தனர். ஆனால், உயிரழிவு 50ஆயிரத்திற்கு மேற்பட்டதாக இருக்கும் என இவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22பேரில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் அக்காலக்கட்டத்தில் தாங்கள் வெளிநாடு சென்றிருக்கவில்லை என்பதை தமது கடவு சீட்டுக்கள் மூலம் நிரூபிப்பார்களா? இத்தகைய பெரும் அழிவுக்கு முழுக்காரணமாக இருந்துவிட்டு இன்று உத்தமர்கள் போல் நடிப்பது வேடிக்கையாக உள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பில் எவருடனும் தகுந்த ஆதாரத்துடன் விவாதிக்க தயாராக உள்ளேன் என வெளிப்படையாக கூற விரும்புகின்றேன்.

இதன்பின் 18ம் திகதி யுத்தம் முடிவடையும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகள் எவருக்கும் இயங்க மறுத்த விடயம் உலகறிந்த உண்மை. ஏனைய விடயங்கள் தவிர்த்து இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மட்டும் வைத்து ஆராய்ந்து பார்ப்பின் கடைசி நேரத்தில் இழந்த பல்லாயிரகணக்கான உயிர்கள், சொத்துக்கள் அத்தனைக்கும் பொறுப்பு கூறவேண்டியவர்கள் யாரென்று நான் கூறவேண்டியதில்லை. ஆனால் எம்மினத்தின் காவலர்கள் என கூறிக்கொண்டு, ஏனைய சகல அமைப்புக்களையும் மட்டம் தட்டி செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், தமது குற்றங்களை மறைப்பதற்காக இந்தியாவிலே அமைக்கப்பட்ட நினைவு சின்னம் போன்று முள்ளிவாய்க்காலில் அமைக்க போவதாக தம்பட்டம் அடிப்பது பல்லாயிர கணக்கில் உயிரை இழந்த அப்பாவி மக்கள் மற்றும் போராளிகளையும் ஏழனம் செய்வதாக நான் கருதுகின்றேன்.

ஏனெனில், யுத்தம் நிறைவுக்கு வரும் இறுதி காலப்பகுதியில் இவர்கள் நடந்து முறையை அவதானிக்கும்போது, விடுதலை புலிகள் முற்று முழுதாக அழிக்கப்பட வேண்டும் என கருதி செயற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்க வேண்டி உள்ளது. இவர்களினுடைய கூத்துக்கு முடி சூடுவது போல எந்த தளபதி சபதம் செய்து போராளிகளை அழித்தது மட்டுமல்லாமல், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தினருடைய பலம் இரட்டிக்கப்பட வேண்டும் என கூறியவருக்கு மக்கள் சிந்திய இரத்தம் காயமுன்பே ஜனாதிபதி தேர்தலிற்கு அவருக்கு வாக்களிக்கும்படி ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்தமையை, தமிழ் இனம் இருக்கும் வரைக்கும் இந்த அவமானம் எவராலும் மறுக்க கூடியது அல்ல. இதற்காக இவர்கள் பணம் பெற்று செயற்பட்டார்கள் என கூறின் இவர்கள் மறுப்பார்களா? இத்தகைய துரோகங்களை ஒன்றன் பின் ஒன்றாக தமிழ் மக்களிற்கு இழைத்து அந்த வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் வாழ்ந்த 7 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் 63ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே இவர்களுடைய வேட்பாளருக்கு வாக்களித்த பின்பும் இவர்களிற்கு தமிழ் மக்களின் முன் தோன்றுகின்ற தைரியம் எப்படி வந்தது என கேட்க தோன்றுகின்றது.

உயிரிழந்த மக்களிற்கு தூபி அமைக்க கூட்டமைப்பினர் முனைவது உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் பாதிக்கும் ஓர் ஈன செயலாக இவர்களிற்கு தொன்றவில்லையா? அவ்வளவு தூரம் பதவி வெறி இவர்களிற்கு ஏறியுள்ளதா? ஆகவே அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களிற்கு எனது தாழ்மையான வேண்டுகோள். எவரும் இவ்விடயத்தில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்காமல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் அமைதியான முறையில் நினைவு நாளை அனுஸ்டிக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். தூபி அமைப்பது தொடர்பில் அரசியல் சார்பற்ற ஓர் பொது அமைப்பினர் பொறுப்பேற்பதே பொருத்தமாகும் என இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
-நன்றி-

வீ.ஆனந்தசங்கரி செயலாளர்நாயகம் தமிழர் விடுதலை கூட்டணி

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top