பிரான்ஸில் மே தினப் பேரணியில் வன்முறை: பொலிஸ் காவலில் 109 பேர் .

மே தினப் பேரணியில் வன்முறை வெடித்ததில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 109 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுத்துறையில் மாற்றங்கள் கொண்டுவரும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே தினத்தன்று நடத்தப்பட்ட பேரணியில் வன்முறையாளர்கள் புகுந்தனர்.
1200 முகமூடி அணிந்த எதிர்ப்பாளர்கள் பேரணியில் பங்கேற்றனர், தாக்குதல்களில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட நான்குபேர் காயமடைந்தனர். இதையடுத்து பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். அரசு செய்தித் தொடர்பாளரான Benjamin Griveaux முகமூடி அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கடுமையாக விமர்சித்தார்.
”உங்களுக்கு உண்மையான கொள்கைகள் இருக்குமானால் முகமூடி அணியாமல் போராடுங்கள், முகமூடி அணிபவர்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே நாடு முழுவதும் தொழிலாளர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ரயில்வே ஊழியர்கள் ஒரு புறம், ஆசிரியர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர பணியாளர்கள் இன்னொருபுறம் என வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் 223,000 பேர் கலந்துகொண்ட பாரீஸ் பேரணியைப் போல இல்லாது இந்த மே தினப் பேரணியில் வெறும் 55,000 பேர் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.