பிரித்தானியாவில் பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 5 பேர் படு காயம்!
பிரித்தானியாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியதால் 5 பேருக்கு மிகவும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Trafford Park அருகே பொதுமக்கள் பலர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதனால் தற்போது வரை 5 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9. 49 மணியளவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது.
இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 5 பேர் மட்டும் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தை அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பொலிசார், இது தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை எனவும் கார் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை பொலிசார் தேடி வருகின்றனர்.