News

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் கடமையிலிருந்து ஜனாதிபதி விலக முடியாது.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் கடமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயற்படவேண்டும். இதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். மாறாக மக்கள் ஆணையை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் உரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்பி இந்தக் கருத்தை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைத்து, அதிலே முக்கியமான ஒரு விடயமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு வரைபு முயற்சிகளை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிடாமை ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜனாதிபதி தனது உரையில் இதனைக் குறிப்பிடாததால் தோற்றுப்போன விடயமாகவோ அல்லது இனி நடைபெறாதோ என்று எவரும் அதனைக் கைவிட முடியாது.

ஏனெனில் அது ஒரு தனி மனித அபிலாஷை மட்டுமல்ல அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையாகும். அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என உறுதிவழங்கியிருந்தார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது நாட்டில் உள்ள 90 வீதமானவர்கள் புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு ஆணை வழங்கியுள்ளனர்.

இந்தப் பாராளுமன்றத்தில் உள்ள சகலரும் இணைந்து ஏகமனதாக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியுள்ளோம். அது மாத்திரமன்றி அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தனது அங்குரார்ப்பண உரையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்படாத காரணத்தால் இவற்றை அரசாங்கம் கைவிட்டுவிட்டதாக நாங்கள் கருதப்போவதில்லை.

அனைத்து மக்களும் சேர்ந்த செய்கின்ற பிரதானமான பணியை தொடர்ந்தும் முன்னெடுப்போம். ஜனாதிபதி இந்த ஆணையை பெற்றவாரக இருப்பதுடன், அவருக்கு எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தில் இதற்கு தலைமைதாங்க வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அவர் தவற முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசாங்கம் இதனைச் செய்து முடிக்கத் தயங்கினால் அதற்கான முழு அழுத்தங்களையும் பிரயோகிப்போம்.

அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி சகலருக்கும் அவசியமானது. புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே சகலரும் ஒன்றுமையாக வாழ முடியும். இதனைப் புறந்தள்ளினால் வேறு பிரதிபலங்கள் நாட்டில் ஏற்படலாம். சகல இனங்களின் சுபீட்சத்துக்கும் புதிய அரசியலமைப்பே அவசியமானது.

கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிடாமல் விட்டமை பாரிய குறைபாடாக இருந்தாலும் அந்த செயற்பாடு நடக்கும், நடக்கப் பண்ணுவோம் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top