India

பேராசிரியை நிர்மலாதேவி வீட்டின் பூட்டு உடைப்பு முக்கிய ஆவணங்கள் திருட்டு?

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். நிர்மலாதேவி கொடுத்த தகவலின்பேரில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் நிர்மலாதேவி, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் 2ல் நீதிபதி திலகேஸ்வரி முன்பு நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை மே 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீசார் கொண்டு சென்றனர்.வீட்டின் பூட்டு உடைப்பு: இதற்கிடையே, நிர்மலாதேவி வீட்டில் ஆவணங்கள் திருடப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாதேவியின் வீடு அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி, காவியன் நகரில் உள்ளது. இந்த வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதாக, அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு நேற்று பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சென்றனர். உள்ளே பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. தடயவியல் நிபுணர்கள் கைரேகைகள், தடயங்களை பதிவு செய்தனர். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த முக்கிய ஆவணங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top