ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஒரு பெண் போதைப் பொருளின் தாக்கத்தில் தனது இரண்டு குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் அவர்களை வீட்டின் முதல் மாடியில் ஜன்னலின் வெளிப்புறம் உள்ள குறுகலான திண்டில் கொண்டு அமர வைத்துவிட்டு செய்வதறியாது திகைக்க பொலிசார் அவர்களை மீட்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மழை வேறு பெய்து கொண்டிருக்க தங்கள் தாயுடன் இருந்த அந்தக் குழந்தைகள் பயந்து போயிருந்தனர். குறுகலான அந்த இடத்திலிருந்து அவர்கள் எந்நேரமும் விழுந்து விடும் அபாயத்தை உணர்ந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் வந்து அந்தக் குழந்தைகளை மீட்க முயல, அந்தப் பெண்ணோ போதைப் பொருளின் கட்டுப்பாட்டிலிருந்ததால் அவர்களை பொலிஸ் என்று நம்பாமல் அவர்களது அடையாள அட்டையைக் கேட்க பொலிசார் அடையாள அட்டையைக் காட்டுகின்றனர்.
அபோதும் அவர் பொலிசாரை அடையாளம் காண முடியாமல் சத்தமிட அதற்குள் பயந்துபோன குழந்தைகள் இன்னொரு பக்கம் அம்மா, அம்மா என்று அலற ஆரம்பிக்கின்றனர். குழந்தைகளிடம் பொலிசார் பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களைக் காப்பாற்ற வந்திருக்கிறோம் என்று கூறியபடியே அவர்களை குறுகலான அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்று ஜன்னல் வழியே வீட்டுக்குள் இருந்த பெண் பொலிசாரிடம் கொடுக்கின்றனர்.
அந்தக் குழந்தைகள் சரியான உடை கூட அணியவில்லை, ஒரு வயதான அந்த ஆண் குழந்தை வெறும் டயாப்பர் மட்டும் அணிந்திருக்க , 3 வயது பெண் குழந்தை சட்டை அணியாமல் வெறும் லெக்கிங்ஸ் மட்டும் அணிந்திருக்கிறாள். ஒரு வழியாக குழந்தையை மீட்ட பின் பொலிசார் 23 வயதான அந்த தாயையும் மீட்டனர்.
குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக அவள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. அவள் தற்போது மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். குழந்தைகள் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ள அந்த வீடியோ ஒரு புறம் அதிர்ச்சியையும் மறுபுறம் பரிதாபத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.