போர்க்களமான ஜெருசலேம்: கொன்று குவிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்கள் .

ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய படைகள் 43 பாலஸ்தீனிய மக்களை கொன்று குவித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 2,200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 35,000 பாலஸ்தீனிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வில் இவான்கா டிரம்ப் தமது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுவதாக பாலஸ்தீனிய மக்கள் கருதுகின்றனர்.
மட்டுமின்றி காஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். எல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலஸ்தீனர்களை கோபப்படுத்தியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்பட்டது.
அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.சுமார் 2,200 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.