மன்னாரில் சிறி சபாரத்தினம் உட்பட போராளிகளின் 32ம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்டிப்பு.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள், பொது மக்களின் 32 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி பொதுக்கூட்டம் இடம் பெற்றது.
குறித்த அஞ்சலி பொதுக்கூட்டத்திற்கு, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளர் நாயகம் சிறிகாந்தா, வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், குகதாஸ், விந்தன் கனகரத்தினம், புவனேஸ்வரன், இலங்கை தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதி நிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ். மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நினைவு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னத்தின் 32வது வருட நினைவு அஞ்சலி
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னத்தின் 32வது வருட நினைவு அஞ்சலி அந்த கட்சி இயக்கத்தினால் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் யாழ். கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா ஆலோசனைக்கமைய சிறீரெலோ இளைஞரணியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த போராளிகளான சுபாஷ், ரஞ்சன் (மாமா), அஜித், சங்கர், அல்பிரட், வின்சன்ட் மற்றும் வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் அந்தோனி, செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவசந்துரு, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான அதிர்ஷ்ட செல்வம், விஜயகுமார் ஆகியோருடன் இளைஞரணி தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.