News

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: வடமாகாண கல்வி அமைச்சரின் முக்கிய கோரிக்கை .

நாளை மறுதினம் வடமாகாண சபையின் அனைத்து பாடசாலைகளிலும் மாகாண சபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.

கடந்த முப்பதாண்டு கால போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன், பல ஆயிரக்கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

இந்நிலையில் எமது இனத்தின் உரிமைக்குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. மேலும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும்.

எனவே, எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும். அத்துடன், அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

To Top