Canada

மே 18, 2018: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 9 வது வருட நினைவு நிகழ்வுகள்

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக அனைத்து அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது அனைத்து தமிழ் மக்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

மே 18, 2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி: தமிழின அழிப்பு நினைவு நாள்: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவு கூரும் தமிழின அழிப்பு நினைவு நாள் ஸ்கார்புரொ டவுன் சென்டறிற்கு அருகில் உள்ள ஆல்பர்ட் கம்பெல் சதுக்கத்தில் (Albert Campbell Square) ஒன்றிணைந்த கனடிய தமிழ் மக்களின் பெரு நிகழ்வாக நடைபெறவுள்ளது.

மே 19, 2018 சனிக்கிழமை: காலை 10 மணியிலிருந்து 2 மணிவரை: குருதிக்கொடை நிகழ்வு: மார்க்கம் வீதி மற்றும் லோரன்ஸ் வீதிக்கு அருகாமையில் உள்ள சீடார்புரூக் சமூக நிலையத்தில் (Cedarbrook Community Centre – 91 Eastpark Blvd, Toronto, Ontario M1H 1C6 – Markham Rd & Lawrence Avenue) நடைபெறவுள்ளது. அன்று எம் மக்கள் குருதிக் கடலில் குளித்த கொடுமையின் நினைவாக இந்த குருதிக் கொடை நிகழ்வு இடம்பெறுகின்றது.

முதன்மைப் பேச்சாளராக நிர்மானுசன் பாலசுந்தரம் அவர்கள் இம்முறை கனடிய தமிழ் உறவுகளுடன் இணைந்து கொள்கின்றார். இவர் ஒரு அரசறிவியலாளர், ஊடகவியலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவர் சனல்-4 (Channel-4) எனும் ஊடகம் முதல் முதலாக வெளியிட்ட போர் குற்ற ஆதாரத்தை வழங்கிய இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஒரு உறுப்பினராக பங்காற்றுபவர். 16 வருட காலமாக தொடர்ச்சியாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக பயணிப்பவர். 10 வருடகாலமாக ராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டு ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தொடர்ச்சியாக உழைப்பவர்.

முதன்மைப் பேச்சாளராக தர்சா ஜெகதீஸ்வரன் அவர்களும் இம்முறை கனடிய தமிழ் உறவுகளுடன் இணைந்து கொள்கின்றார். கனடிய தமிழரான தர்சா, 2016 ல் தமிழ் ஈழத்திற்கு சென்று போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காகன பல வேலைத்திட்டங்களில் இன்று வரை ஈடுபட்டு வருபவர். இவர் ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர், சட்டத்தரணி, ஆராய்ச்சியாளர். பல தடவைகள் ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் கலந்து கொண்டு எம் மக்களுக்கான நீதி வேண்டி உரத்துக் குரல் கொடுப்பவர்.

கனடா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் எம் இனத்தின் பேரிழப்பின் வலியை சுமந்து வாழும் தமிழினமாக ஒற்றுமையாக வரலாற்றில் தடம் பதிக்கும் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று எழுகை கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகின்றோம்.

2009 மே மாதம் தாயகத்தில் எம் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டிப் பல போராட்டங்களை செய்தார்கள். எப்படியாவது எம் மக்களை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் அன்று கனடிய மண்ணில் பல்வேறு தெரு முனைகளில் நின்று எம் கனடியத் தமிழர்களும் போராடினார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை. கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு.

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சுமார் எழுபதினாயிரத்திற்கும் அதிகமான எம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் போக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் படுகாயமுற்றார்கள்.

கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு இலங்கை அரசு நடாத்திய தமிழினப்படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள். சர்வதேசமயப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT

மேலதிக தொடர்புகளுக்கு: 416-830-7703

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top