News

– ரணில் எதிர்ப்பு குழு சம்பந்தனை சந்திக்கின்றது

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் தூணாக கருதப்படுபவரும் அமைச்சரவை மாற்றத்தின் போது புறக்கணிக்கப்பட்டவருமான அரசியல் வாதி ஒருவரின் தலைமையில் புதிய அரசியல் கட்சி அமைவதற்கான இரகசிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களாக கருதப்படும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த கட்சியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்து தாமரை மொட்டை சின்னமாக கொண்ட ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு மக்கள் ஆதரவு கடந்த தேர்தலில் கணிசமாக கிடைத்ததை முன்னுதாரணமாக கொண்டு இந்த அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளி கட்சிகளை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இதில் இணையவுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் இந்த மாற்று அரசியல் குழு ஒன்றிணைந்த எதிர்கட்சியான மகிந்த அணியுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு குழு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ரணில் எதிர்ப்பு குழுவின் சார்பில் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு ரணில் எதிர்ப்பு குழு கோரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top