News

வடக்கு கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லையேல் நாட்டுக்கு மீட்சி இல்லை: சம்பந்தன்.

வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாகவுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் இலங்கையில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துவிட முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,வடக்கு, கிழக்கில் நிலவும் மிகமுக்கிய அரசியல், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு கடந்த 71 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் உரியவகையில் தீர்வுகள் காணப்படவில்லை. இப்பிரச்சினைகள் உரியவகையில் தீர்க்கப்படும்வரை நாட்டுக்கு மீட்சி இருக்காது. எனவே, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எனினும், குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் வடக்கு, கிழக்குப் பிரச்சினை தொடரவேண்டும் என்பதே சிலரின் விரும்பமாக இருக்கின்றது. பிரிக்கப்படாத நாட்டுக்குள் சகல பிரஜைகளும் சமவுரிமையுடன் வாழும் வகையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அரசியலமைப்பின் ஊடாக உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகள் கடந்த சில நாட்களாக இடம்பெறவில்லை. தேர்தல், கட்சி மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் இவை நடக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கமைய அதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடாக உள்ளது.

இதனால்தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை எதிர்க்கமுடியாதுள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே நாங்களும் இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் தொடர்ந்தும் வருகின்றது. பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையிலான தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம்.

இது புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஏனைய நாடுகள் முன்னேறிச் செல்வதற்கு அரசியலமைப்புகள் உதவியதைப்போன்று எமது நாட்டுக்கும் புதிதான அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top