News

வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டாமென தமிழர்கள் கோரும் நிலை உருவாகிறது .

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு தமிழ் மக்கள் சிலரும் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் எனக் கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “வடமாகாண முதலமைச்சர் யார் என கேட்டார்கள். நான் அதற்கு திருப்பி ஒரு கேள்வி கேட்டேன். கிழக்கு மாகாண சபை செயலிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வைக்க அழுத்தம் கொடுப்பீர்களா? கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்? என ஏன் ஒரு ஊடகம் கேள்வி எழுப்பவில்லை? உங்களுக்கு கிழக்கு மாகாணம் தேவையில்லையா? வடகிழக்கு இணைப்பு தேவையற்றது என இவர் கூறினார் என கோடிட்டு காட்டி கொண்டு இருப்பது தான் உங்கள் வேலையா? என கேட்டேன்.

அதற்கு அவர்கள் இந்த பதிலை மறுநாள் ஊடகத்தில் எழுதி இருக்க தானே வேண்டும், நாங்கள் இப்படி கேட்டோம். அவர் இப்படி கூறினார் என ஒரு ஊடகமும் அதனை பிரசுரிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இவர்களுக்கு உள்ள கரிசனை இல்லை. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டும். இன்றைக்கு முஸ்லிம் மக்கள் தான் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிறார்கள். தற்போது கணிசமான தமிழ் மக்களும் வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டாம் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்களும் வடக்கு, கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள். கோஷத்திற்கு மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். இணைக்க விருப்பமான நாங்கள் அதற்கான சாத்தியங்களை நோக்கி நகரும் போது, முஸ்லிம் மக்களுடன் இணங்கி போனாலே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் என நான் கூறினால் அந்த உறவை வேண்டாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று கூறினேன். அதில் இப்போதைக்கு என்பதனை விட்டு விட்டு சாத்தியம் இல்லை என போட்டார்கள். இப்பவும் சொல்லுறேன். அந்த உறவு மேம்பட வேண்டும், மேம்பட்டால் தான் அது சாத்தியமாகும் என்றார். அதேநேரம், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்து விசாரிப்பது சிலருக்கு விருப்பமில்லை.

ஏனெனில் அவர்கள் இப்பொழுதும் எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு. எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுதுகின்றார் எனவும் இனி எழுத கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார். லசந்தவின் படுகொலையின் பின்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர். சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன்.

முதல் வழக்கு தவணையின் ஆஜராகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் ஆஜரான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்” என கட்டுரை எழுதி இருந்தார்கள். அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள். லசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top