News

வாக்குறுதியளித்ததைப் போன்று வாக்குறுதியை நிறைவேற்றி வையுங்கள் பிரதமரிடம் மாவை சேனாதிராஜா.

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதாக அளித்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றுங்கள்.”
– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் வகையில் அங்கு சென்ற பிரதமர் ரணில், இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

மாவை எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமரே தெற்கு அபிவிருத்தியுடன் வடக்கை ஒப்பிட முடியாது. வடக்கு மாகாணம் போரால் பாதிக்கப்பட்ட பகுதி. அதனைக் கருத்தில்கொண்டு, போரால் பாதிப்புக்குள்ளான பகுதிகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும். விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, மீள்குடியேற்ற அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அத்தோடு, வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக நீங்கள் அமைச்சரவை பத்திரமொன்றையும் தாக்கல் செய்தீர்கள். குறிப்பாக 35, 45 வயதுக்கு மேற்பட்ட பின்னரும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டீர்கள்.
இதனை மிகவும் பாரதூரமான பிரச்சினையாகக் கருதி, எமக்கு வாக்குறுதியளித்ததைப் போன்று இப்பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள்” – என்றார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் , இவ்விடயம் தொடர்பாக கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top