ஹவாய் தீவுவாசிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை: அமிலமாக மாறும் கடல் ,

ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை வெடித்ததால் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய பிரச்சனை ஒரு புறமிருக்க மறுபுறம் எரிமலைக் குழம்பு கடலில் சென்று சேர்வதால் உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் எரிமலைக் குழம்பிலிருந்து உருவாகும் கண்ணாடித் துகள்களும் காற்றில் பரவி மக்களுக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் எரிமலைக் குழம்பு கடலுடன் சேரும் இடத்தினருகே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமில வாயுவும், கண்ணாடித் துகள்களும் நுரையீரல், கண்கள் மற்றும் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்தது மிக சூடான தண்ணீர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எரிமலைக் குழம்பு தண்ணீருடன் சேருவதால் அது உறைந்து பாறையாக மாறும், இருந்தாலும் அந்தப் பாறை நிலையற்றது, அது திடீரென உடையக்கூடும் எனவே அதன் அருகே செல்லாமல் இருப்பது நல்லது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த ஒருவர் “எரிமலைக் குழம்பு குண்டினால்” தாக்கப்பட்டார். அதாவது திடீரென்று எரிமலைக் குழம்பு ஒரு வெடி போல் வெடித்துச் சிதறியதில் அவரது கால் மிக மோசமாக சேதமடைந்தது. மே மாதம் 3 ஆம் திகதி எரிமலை வெடிக்கத் தொடங்கியதிலிருந்து இதுவே முதல் மோசமான காயமாகும்.
இதுபோன்ற வெடிப்புகள் மேலும் நிகழும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.