காரில் குழந்தையை பூட்டிவைத்து சென்ற தந்தை: துடிதுடித்து உயிரிழந்த சோகம் ..

அமெரிக்காவில் வளர்ப்பு குழந்தையை தந்தை காரின் உள்ளே வைத்து சென்று மறந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மாட் பார்கர் என்பவர் தனது மனைவி ஜெனி பெர்கர் மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடீரா (1) என்ற பெண் குழந்தையை சமீபத்தில் தம்பதிகள் தத்தெடுத்தனர். இரு தினங்களுக்கு முன்னர் பார்கர் தனது மூன்று குழந்தைகளையும் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் விட தனது காரில் அழைத்து சென்றார்.
இரண்டு குழந்தைகளை அங்கே விட்ட நிலையில் கடீராவை காரிலிருந்து இறக்கவில்லை.பின்னர் காரில் தனது வேலை விடயமாக பல இடங்களுக்கு சென்றுள்ளார். மாலை ஆனவுடன் குழந்தைகளை அழைத்து வர ஜெனி குழந்தைகள் பாதுகாப்பகத்துக்கு சென்ற நிலையில் அங்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடீரா அங்கு வரவேயில்லை என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து கணவருக்கு போன் செய்த போது தான் காரின் உள்ளே கடீரா இருப்பதே அவர் நினைவுக்கு வந்தது. இதையடுத்து பார்கர் வீட்டுக்கு வந்த நிலையில் காரை இருவரும் பார்த்துள்ளனர் அப்போது மயக்க நிலையில் குழந்தை இருந்துள்ளது, இதையடுத்து கடீராவை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அவள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். காரில் உள்ள சூடு தாங்காமல் கடீரா துடிதுடித்து இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் பொலிசார் பார்கர் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை.