அசாமில் வெள்ளத்தில் சிக்கி 4½ லட்சம் பேர் பரிதவிப்பு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு…

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய நதிகளான பிரம்மபுத்ரா, தன்ஸ்ரீ, ஜியா பராலி, கோப்லி, கதாகால், குஷியாரா, லோங்காய் ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கரீம் கஞ்ச் மற்றும் ஹைலாகாண்டி உள்பட 6 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
பல இடங்களில் நதிகளின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநிலத்தில் 4½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பரிதவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பராக் பள்ளத்தாக்கு பகுதியை மாநில நீர்வள மந்திரி கேசவ் மகந்தா நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே மழை, வெள்ளத்துக்கு நேற்று 5 பேர் பலியாயினர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.