India

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை : முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்…

சென்னை : அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால், ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்த்ததில்லை என்று விசாரணையில் வாக்குமூலம் அளித்து இருப்பது ஆணைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் ஆஜரானார். அப்போது ஆணைய நீதிபதி ஆறுமுகச்சாமி மற்றும் ஆணை வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். எனினும் பல கேள்விகளுக்கு முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தெரியாது என்றே பதில் அளித்தார். இதனால் நீதிபதி ஆறுமுகச்சாமி கோபமடைந்தார். பின்னர், அவரை மீண்டும் இன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அளித்த வாக்குமூலம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2011ல் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியாக இருந்தேன். ஜெயலலிதா-சசிகலா இடையே கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என தெரிந்து கொண்டேன்.

கடந்த அக்டோபர் 2015ம் தேதி சென்னையில் கால்பந்து போட்டி நடந்தது. இதில், அம்பானி குடும்பத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதா பச்சன் ஆகியோர் பார்வையாளராக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது ஜெயலலிதாவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் நான் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதாக தெரிந்து கொண்டேன். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால், ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்த்ததில்லை. கண்ணாடி வழியாக சில விஐபிக்கள் ஜெயலலிதாவை பார்த்தாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதா உடல் நிலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல் நிலை சீரியஸாக இருப்பதை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். அது குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கவில்லை. மேலும், தீபா ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய கவர்னர் அப்போலோ மருத்துவமனை வந்த போது அழைத்து சென்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top