அமெரிக்காவின் ரகசியங்களை சீனாவுக்கு விற்ற சிஐஏ அதிகாரி!

அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களை சீனாவிற்கு விற்ற முன்னாள் சிஐஏ அதிகாரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு துறையில் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கெவின் பாட்ரிக் மல்லோரி (61) மீதுதான் மேற்கண்ட குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீன உளவுத்துறை யை சேர்ந்த மைக்கேல் யங் என்பவர் கெவினுக்கு அறிமுகம் ஆனார். திடீரென கடந்த ஆண்டில் அமெரிக்க உளவு துறையின் ரகசிய ஆவணங்களை தனக்கு தந்தால் சீன அரசின் மூலம் பல கோடி டாலர்கள் கெவின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு ஒப்புக்கொண்ட கெவினுக்கு நவீன போன் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. சொன்னதை செய்த கெவின் சில ரகசிய ஆவணங்கள் சீன உளவுத்துறைக்கு மைக்கேல் மூலம் கொடுத்தார். இதற்கு பதிலாக சீன அரசும் கெவின் வங்கி கணக்கில் பல லட்சம் டாலர்களை வரவு வைத்தது. இந்த ரகசிய பணப்பரிவர்த்தனை பற்றி எப் பி ஐக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் கெவினிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது நடந்த தகவல்களை கெவின் கூறினார். அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பேரில் சொந்த நாட்டுக்கு எதிராக சதி செய்தது மற்றும் ரகசிய ஆவணங்களை வெளியே கொடுத்தது போன்ற வழக்குகள் பதியப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கெவின் பேட்ரிக் மல்லோரி மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
இவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.