அமெரிக்காவிற்கு மஹிந்த எச்சரிக்கை!!!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் “அமெரிக்காவினால் எமக்கு உத்தரவிட முடியாது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா போட்டியிடக்கூடாது எனவும் அதுல் கெசாப், மஹிந்தவிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அந்தச் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை எனவும், குறித்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது எனவும், இதில் அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக, அமெரிக்க தூதரகத்தின் பொதுசனத் தொடர்பு திணைக்களத்துக்கு ஊடகங்கள், மின்னஞ்சல் மூலமாக கேள்விகளை அனுப்பியிருந்தன.
எனினும் குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க தரப்பிடம் இருந்து முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க தூதரகம் குறித்த செய்தியினை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. மேலும், “அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் சமூகத் தலைவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவ்வாறான தனிப்பட்ட சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாது” எனவும் அமெரிக்கத் தூதரகம் பதில்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.