அமெரிக்காவில் கலாச்சார விழாவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 20 பேர் கவலைக்கிடம் ….

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ட்ரெண்டன் நகரில் முழு இரவு கலாச்சார விழாவின்போது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெண்டன் நகரில் ஆண்டு தோறும் முழு இரவு கலாச்சார விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இசை, கலை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
மட்டுமின்றி சனிக்கிழமை மதியம் துவங்கும் இந்த விழாவானது முழு இரவும் கடந்து அடுத்த நாள் மதியம் வரையில் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவினை கண்டுகளிக்க சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடுவார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி சுமார் அதிகாலை 2.45 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே குண்டடிப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் 13 வயது சிறுவன் உள்ளிட்ட 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய எதிர் தாக்குதலில் 33 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய இன்னொரு நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவ பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதுவே துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமாகவும் இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விசாரணைக்கு பின்னரே என்ன காரணம் என்பது தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.