இரவில் குடிபோதையில் இருக்கும் பொலிஸாரால் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகள்!

இலங்கையில் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் அதிகரித்து விட்டதாகவும், இதை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ரயிட் டு லைப் அமைப்பின் சட்டப்பிரிவு வழக்கறிஞர் பிரசங்க பிரணாந்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஆகவே இந்த மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கும், இதை தடுத்து நிறுத்துவதற்கும் 28ஆம் திகதி ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் மனித உரிமை மீறல்கள் குறைந்ததாக தெரியவில்லை. பொலிஸாரினால் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளே இதற்கு உதாரணமாகும்.
கைதிகளை அடித்து துன்புறுத்துவதன் மூலம் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். பொலிஸ் நிலையங்களில் கைதிகள் அழுது, கத்தும் போது அவர்களுக்கு அதிகமாக தாக்குதல் நடத்தப்படுகின்றது.
அதிலும், இரவு நேரங்களில் பொலிஸ் நிலையத்தில் மது போதையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதிகளை அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர்.
ஓரிரு பொலிஸாரே இந்த செயலை முன்னெடுக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு இருக்கும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு போவதில்லை. ஆகவே இவர்கள் மது போதையில் இருக்கும் போது அவர்கள் எவ்வளவு மோசமாக தாக்குகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆகவே இந்த நிலை மாற வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.